பக்கம்:மறைமலையம் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
25


இனி, மேலே காட்டிய நால்வகை உய்வனவுகளும் இயற்கையிலே பொருத்தப்பெற்ற உணவுப் பண்டங்களையே எல்லா இரக்கமும் உடைய எல்லாம்வல்ல இறைவன் மக்களாகிய நமக்கும் மற்றைச் சிற்றுயிர்களுக்கும் படைத்துக் கொடுத்திருக்கின்றான். அத்தகைய உணவுப் பண்டங்கள் பாலும் பாலிலிருந்துண்டாகும் வெண்ணெய் நெய் புளித்த பால்மோர் தயிர் பாற்கட்டி முதலியனவும், நல்லெண்ணெய் கடுகெண்ணெய் வாதுமையெண்ணெய், தேங்காயெண்ணெய் கடலையெண்ணெய் முதலியனவும், அரிசி கோதுமை வாற்கோதுமை சோளம் கம்பு கேழ்வரகு முதலியனவும், உருளைக் கிழங்கு சேப்பங்கிழங்கு வள்ளிக் கிழங்கு கருணைக்கிழங்கு முள்ளங்கி வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலியனவுந், துவரம்பருப்பு, உழுத்தம் பருப்பு கடலைப்பருப்பு பச்சைப் பருப்பு மொச்சைப் பருப்பு காணம் கொள் எள் முதலியனவும், வாதுமைக் கொட்டை கடுக்கொட்டை முந்திரிக் கொட்டை தேங்காய் முதலியனவும் அரைக்கீரை சிறுகீரை முளைக்கீரை பொன்னாங்காணிக்கீரை தூதுளங்கீரை முதலியனவும், மாங்கனி வாழைக்கனி பலாக்கனி நாரத்தங்கனி அத்திக்கனி கொடி முந்திரிக்கனி அன்ன தாழங்கனி விளாங்கனி முதலியனவும் ஆகும். இப் பண்டங்களை மாறிமாறி உட்கொண்டு வந்தால், நமதுடம்புக்கு வேண்டிய எல்லாவகை உய்வனவுகளும் எளிதிலே கிடைக்கும் நால்வகை உய்வனவுகளும் அவற்றிற்கு மேற்பட்டனவும் மேற்குறித்த பண்டங்கள் எல்லாவற்றிலும் ஒருங்கே அமைந்திராவிட்டாலும், ஒன்றிலில்லாத ஓர் உய்வனவு மற்றொன்றிற் பொருந்தியிருத்தலால், ஒரே வகையான சில பண்டங்களையே ஒரு தொடர்பாய் உண்ணாமற், பல்வகைப் பண்டங்களையும் பலகாலும் மாறி மாறி உட்கொண்டு, உடம்புக்கு வேண்டிய எல்லாவகையான உய்வனவு களையும் இசைவித்துக் கொள்ளல், நோயின்றி நீண்டகாலம் உயிர்வாழ விழைகுவா ரெல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம்.

ஆனால் மேற்காட்டிய உணவுப் பண்டங்களைப் பயன்படுத்தும் முறையில், அவற்றின்கண் உள்ள உய்வனவுகள் அழிந்துபோகாமற் பாதுகாத்தல் வேண்டும். தீயில் வைத்த உணவு சமைக்கும் முறையால், திண்பண்டங்களில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/58&oldid=1597294" இலிருந்து மீள்விக்கப்பட்டது