பக்கம்:மறைமலையம் 1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

❖ மறைமலையம் 1 ❖

உய்வனவுகளிற் பெரும்பாலன அழிந்து போகின்றன. நெருப்பில் வைத்து உணவு சமைக்கும் வழக்கம் பல்லாயிர ஆண்டுகளாக மக்களெல்லார்க் குள்ளும் பெரும்பாலும் வேரூன்றிப் பரவி விட்டமையால் அதனை முற்றும் நிறுத்தி விடுவதும் இயலாது. ஆதலால், தீயில் வைத்துச் சமைக்கும் உணவையே மிகுதியாய் அருந்திவரும் நம்மனோர், உய்வனவுகள் அழியாத பச்சைப் பண்டங்களையும் நாடோறும் அருந்தித் தமதுடம்பின் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் பழகிவரல் வேண்டும்.

சமைத்துண்ணும் நம்மனோர், முதலாம்வகை உய்வனவு மிகுதியாய் உள்ள வெண்ணெய் அல்லது நெய்யை நெருப்பில் ஏற்றிச் சூடேற்றாமலே நாடோறும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு வரலாம்; அங்ஙனமே சீமைத் தக்காளிப் பழத்தையுஞ், சோளங் கொள்ளு தினை முதலிய விளை பொருள்களையும் பச்சையாகவே மென்று தின்னலாம்.

இனி, இரண்டாம் வகை உய்வனவு மிகுந்துள்ள சீமைத் தக்காளிப்பழம், கடுக்கொட்டை (Walnut), சோளம், கம்பு, ஓட்மீல் (Oatmeal), பச்சைப்பட்டாணி, முந்திரிப்பருப்பு. வாதுமைப்பருப்பு, வெங்காயம், ஆவின்பால் முதலான பொருள்களையும் நெருப்பின் சேர்க்கையின்றிப் பச்சையாகவே நாளும் அருந்துதல் எவர்க்கும் எளிதேயாம்.

இனி, மூன்றாம்வகை உய்வனவு நிரம்பியுள்ள முளைப் பட்டாணி, புதிய எலுமிச்சம்பழ நாரத்தம் பழச்சாறு, சீமைத் தக்காளிப்பழம், அன்ன தாழம்பழம் முதலியவைகளை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுதலும் எளிதிற் செயக்கூடியதேயாம்.

இனி, நாலாம்வகை உய்வனவு மிகுதியும் வாய்ந்த ஆவின்பால், வெண்ணெய் நெய் முதலியவற்றை உட்கொள்ளுதலும், பிற்பகலிற் பகலவன் வெயிலிற் காய்தலும் எல்லார்க்கும் எளிதில் இயல்வதேயாகும்.

இனி, மேலெடுத்துக்காட்டிய நால்வகை உய்வனவுகளேயன்றி ஐந்தாம் வகையதோர் உய்வனவும் அமெரிக்க தேயத்து மருத்துவ ஆசிரியராற் (DR.J.H.Kellogg) கண்டெடுத்து விளக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் பருப்புகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/59&oldid=1567837" இலிருந்து மீள்விக்கப்பட்டது