❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
கீரைகளிலும், எள் முதலிய வித்துக்களினின்று இறக்கப் பட்டும்நெய்களிலும் மிகுதியாய் அமைந்திருக்கிறது.
இவ்வைவகை உய்வனவுகளும் நிரம்பவாய்ந்த எல்லாப் பண்டங்களையும் எல்லாரும் நாடோறும் பெற்றருந்துதல் இயலாதாயினும், நெய் ஆவின்பால் முந்திரிப்பருப்பு எலுமிச்சம் பழச்சாறு கீரைகள் நல்லெண்ணெய் தேங்காயெண்ணெய்கள் முதலானவைகளை மிக எளியவர்களும் நாடோறும் பெற்றுப் பயன்படுத்துதல் இயல்வதேயாகலின், இவை தம்மையாயினும் நாளுந் தவறாது உட்கொண்டு பிற்பகல் வெயிலிலும் உலவி வருவார்களாயின், நம்மனோர் தமதுடல்நலத்திற்கு இன்றியமையாது வேண்டிய ஐவகை உய்வனவுகளும் எளிதிற் பெற்று நீடினிது வாழ்வர்.
மேலெடுத்துக்காட்டிய உணவுப் பண்டங்களில் உடம்பின் கூறுகள் அத்தனையும் வளர்ப்பதற்கும் வலிவேற்றுதற்கும் வேண்டிய எல்லாப் பகுதிகளும் அடங்கியிருக்கின்றன. இவற்றைக் காலமும் இடமுந் தமது உடம்பின் கூறுபாடும் அறிந்து, நன்றாய்ச் சுவைத்து உட்கொண்டு செரிக்கும் அளவாய் உண்டு உடம்பிற்கு வேண்டும் முயற்சியுந் தந்துவருபவர்கள், நோயற்ற அழகிய வலிய உடம்பு உடையவர்களாய் நெடுங்காலம் உயிர்வாழ்வார்கள் என்பது திண்ணம்.
முதலில் இவற்றைக் காலமும் இடமும் அறிந்து உண்ணல் வேண்டும் என்றாம். காலம்: வேனிற்காலம் மழைகாலம் குளிர்காலம் பனிக்காலம் என நான்கு வகையாய்ப் பகுக்கப்பட்டு நடைபெறுகின்றது. வேனிற் காலத்திற் குளிர்ந்த பொருள்களையும், மழைக்காலம் முதலிய ஏனை மூன்றுகாலங்களிலுஞ் சூடான பொருள்களையும் உணவாக அருந்திவருதல் நலமுடைத்து. வேனிற் காலத்தில் அரிசியுணவுங், குளிர்காலத்திற் கோதுமை யுணவும் உட்கொண்டால், அவ்வக்காலத்தில் உடம்பில் ஏறியுங் குறைத்துங் காணப்படுந் தட்பவெப்பங்களை அவை ஒத்துநிற்கச் செய்யும். இங்ஙனமே ஒரு நாளிற் பகலவன் வெப்பம் மிகுந்த நடுப்பகலில் நெய்ப்பான பண்டங்களையும் அவன் மறைந்தபோன இராப் பொழுதில் வறண்டு வற்றிய பொருள்களையும் ஆராய்ந்து உண்ணல் வேண்டும். கொழுமை-