பக்கம்:மறைமலையம் 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

❖ மறைமலையம் 1 ❖

யான பண்டங்களைப் பகலவன் ஒளியும் உடம்பின் முயற்சியும் இல்லாத இரவு காலத்தில் அயின்றால் அவை செரித்து இரத்தத்திற் கலவாமையால் நோயை வருவிக்கும்; நடுப் பகற் போதிற் கொழுமையில்லாத உணாப் பொருள்களை உண்டால் அவை விரைவிற் செரித்தலோடு, உடம்பிற்கு வேண்டிய வலிமையைத் தராமையால் தளர்ச்சியையும் உண்டாக்கும். மேலும், உடம்பின் உழைப்பு மிகுதியா யில்லாதவர்கள் விடியற்காலையில் ஏதோர் உணவும் எடுக்கலாகாது. ஏனென்றால், அவர்கள் இரவில் உண்டது தூக்கத்திற் செவ்வையாகச் செரியாமலிருந்து, காலையில் விழித் தெழுந்த சிலநாழிகை நேரத்திற்குப் பின்றான் செரிமானத்திற்கு வரும். காலையில் இரண்டு மூன்று நாழிகை ஆனபிறகு முன்னாள் உண்டது நன்றாய்ச் செரித்துப் போமாதலால், அதன்பின் மெல்லிய உணவெடுத்தல் நன்று முன்னாள் உண்டது அறா திருக்கையிற் காலையிலெழுந்தவுடனே உணவை அடைத்தல் பெரிதுந் தீங்கு பயப்ப தொன்றாம். ஆயினும், உடம்பில் வலிவுஞ் சுறுசுறுப்பும் உள்ள இனம்பிள்ளைகளும் மிகுந்த உழைப்புள்ளவர்களுங் காலையிலெழுந்தவுடன் உணவு கொள்ளுதல் தீதாகாது என்றாலும், அவர்களுங்கூடச் சிறிதுநேரம் பொறுத்துச் சாப்பிடுதல் நந்றென்றே அறிதல் வேண்டும். எத்திறத்தவர்களும் நண்பகற்போதில் மட்டுங் கொழுமையான உணவை வயிறாரவுண்ணல் வேண்டும்; மற்ற இரண்டு பொழுதுகளிலும் எளிதான மெல்லிய உணவை மிசைதல் நீண்ட நாள் உடம்பை நலம்பெற வைத்தற்கு வழியாகும்.

இனி, ஒவ்வொருவருந் தாந்தாம் இருக்கும் ஊரின் நிலத்தினியல்பையுந் தமது உடம்பின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறிந்து, அவற்றிற்குப் பொருத்தமானபடி உணவு கொள்ளப் பழகுதல் முதன்மையாகும். சுக்கான்கல்லாவது கற்பாசைகளாவது கந்தகமாவது நிறைந்த நிலங்கள் சூடானவையாதலால் அவற்றிலிருப்பவர்கள் குளிர்ச்சி வாய்ந்த உணவுகளை உட்கொள்ளல் வேண்டும். ஓதமுங் காற்றுந் தோய்ந்த இடங்கள் ஈரமானவைகளாதலால் அவற்றிலிருப்பவர்கள் சூடான பொருள்களை அருந்தல் வேண்டும். இங்ஙனமே யாறோடும் ஊர்களிலிருப்பவர்கள் அவ்யாற்று நீரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/61&oldid=1567838" இலிருந்து மீள்விக்கப்பட்டது