❖ மறைமலையம் 1 ❖ |
இனி, உட்கொள்ளும் உணவு தீனிப்பையிற் செல்லுதற்கு முன், அது வாயின் அகத்தே நன்றாய் அரைத்துக் குழைக்கப்பட்டுப் பின் கீழ் இறங்குமாறு இறைவன் அமைத்திருக்கும் வாயினமைப்பை உற்று நோக்குங்கால், கட்டிப் பொருள் எதனையும் வாயிற் பெய்தவுடன் விழுங்கும் அறிவிலார் செயல் பெரிதுந் தீங்கு தருவதென்று உணர்தல் வேண்டும். வாயில் இட்டதனை நன்றாய் அரைத்தற்குப் பற்களும், அரைக்கப் பட்டதனைக் குழைத்தற்கு உமிழ்நீரும் அமைக்கப்பட்டிருக்கும் நுட்பத்தை உற்று நோக்கி, இறைவன் வகுத்த அந் நுட்பத்திற்கிசைய நடப்பவர்கள் நோயாற் பற்றப்படாது திண்ணிய உடம்பு உடையராய் நெடுநாள் இனிது வாழ்வார்கள். தீனிப்பையிற் செல்லும் உணவு எளிதிற் செரிக்குமாறு அதன்கட் சில முதன்மையான் மாறுதல்களை உண்டு பண்ணுவது உமிழ் நீரேயாகும். வாயிற் பெய்த உணவு பற்களால் தகர்க்கப்பட்டுத் துகளாகியவுடனே உமிழ்நீர் அதனொடு கலந்து அதனைக் குழைவாக்குவதோடு அதன்கண் உள்ள காடிநீரும்[1] அவ்வுணவிலுள்ள பசை மாவைச் சருக்கரை யாக்கி[2] அதனாற் சூடு பிறப்பித்துத் தீனிப்பையிலிறக்கியதும் அதனைச் செரிப்பிக்கின்றது. உண்ட வுணவை உடம்பிற் சேர்ப்பித்துப் பெரும் பயன்றருதற்குரிய தன்மைகள் இன்னும் பல இவ்வுமிழ்நீரின்கண் அமைத்திருக்கின்றன. ஆதலால், வாயிற் பெய்த எந்த உணவையும் உமிழ்நிரில் நன்றாய்க் கலப்பித்து அதனைத் தீனிப்பைக்குச் செலுத்துதலே பெருநலந் தருவதொன்றாம். உண்ணும் உணவு சிறிதாயிருந்தாலும் அதனை இம்முறை வழுவாது உண்பவர்கள் அதனாற் பெரு நன்மையை அடைவர். தின்னுந் தீனி பெரிதாயிருந்தாலும் அதனைச் செவ்வனே மென்று உமிழ்நீரிற் கூட்டி யுண்ணாமல் விழுங்குபவர்கள் அதனால் நன்மை யடையாது போதலொடு, தீனிப்பைக்கும் மிகுந்த வருத்தத்தைத் தருபவராகின்றார்கள்; அங்ஙனம் விழுங்கியதனைத் தீனிப்பை அரைக்குங்கால் அது புண்பட்டு வயிற்றுளைச்ச லென்னும் நோயையும் விளைவிக்கின்றது: அதுவேயுமன்றி, அத் தீனி நன்கு செரியாமையால் அதிற் பெரும்பகுதி மலக்குடலில் வீணே கழிந்து போகின்றது. ஆகையால், வாயிற் பெய்த எந்த வுணவையும் நன்றாய்ச்