❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
சுவைத்து உண்ணுதற்கு நன்றாய்ப் பழகிக்கொள்க. அங்ஙனம் உண்பதனால் நோய் ஆவதாயிருந்தாலும் உணவு சிறிதாகவே எடுக்கக் கூடியதாயிருந்தாலும் அதனால் விளையும் நன்மைகள்,அங்ஙனம் உண்ணாமையால் வருந் தீமைகளை நோக்க, எத்தனையோ மடங்கு விரும்பத்தக்கவைகளாயிருக்கின்றன.
இனி, ஒவ்வொருவருந் தத்தம் உடம்புக்கு வேண்டுமளவு ஊன் எடுக்க வேண்டுமே யல்லாமல், அளவுக்கு மிஞ்சி எதனையும் எவ்வளவு சுவையுடையதனையும் அருந்த லாகாது. தீஞ்சுவையுடைய பண்டங்களை அயிலுங்கால் எத்திறத்தவரும் அளவுக்கு மிஞ்சி அவற்றை யுண்டலில் அவாவுடைய ராகின்றனர். அத்தகைய தீய அவாவை அடக்காமல் அதன் வழிப்பட்டு மட்டுக்குமேல் தின்பார்களாயின், தீனிப்பை முழுதும் அடைபட்டு அசைவு குறைந்து அவ்வுண வினைச் செரிக்கச் செய்ய மாட்டாது; அதனாற் பல கொடு நோய்கள் விளையும் ஓரோவொருகால் மூச்சு ஓட மாட்டாமல் உயிர் நீங்கினும் நீங்கும். அளவுக்கு மேற்பட்ட தீனி எடுப்பவனிடம் வந்து சேர்வதற்கு நோய்களெல்லாம் மடிகட்டிக் கொண்டு நிற்கும்; இது குறித்தே திருவள்ளுவ நாயனார்,
“இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையாண்கண் நோய்”
(குறள் 946)
என்று அருளிச் செய்தார். ஆதலால் அவா அடங்கு மட்டுந் தின்பேம் என்று நினையாது, அவாவினையும் உணவையும் மட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். நோயின்றி உயிர் வாழும் பொருட்டு உணவு கொள்கிறன்றமே யன்றி, உணவின் பொருட்டு உயிர் வாழ்கின்றனம் அல்லமே. ஆகையால் தீனிப்பை ஏற்கும் அளவிலுஞ் சிறிது குறைத்து உண்பதற்கே எப்போதும் பழக்கஞ் செய்து கொள்க. மிக்க சுவையுடைய பண்டங்களையும் மல்லச் சுவைத்து விரையாமல் அருந்தினால் அவற்றை மேலுக்குமேல் தின்ன அவா எழாது. பகற்காலத்தில் உண்ணும் உணவிலும் இராக் காலத்தில் உண்பது அளவிற் சுருங்க வேண்டும். உடம்பு நன்றாயிருக்குங் காலத்தில் எடுக்குந் தீனியிலும், அது நோயாயிருக்கும்போது உட்கொள்வது மிகவும் அளவிற் குறைய வேண்டும்.