பக்கம்:மறைமலையம் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
33

வேண்டும் என்று வரையறைப்படுத்தினால் வேண்டுமளவு உணவெடா மையால் அவர்களுடம்பு மெலிந்து போகும்; ஆதலால்,அவர்கள் திறத்தில் வரையறை செய்தல் கூடாது.அங்ஙனமே, ஓயா உடம்புழைப்பு உள்ளவர்களும் பசியெடுக்கும் போதெல்லாம் உணவு கொண்டாற்றான் அவர்கள் மேன்மேலும் உழைக்கக்கூடும். பின் இவ் விருதிறத்தாரையும் விடுத்து, நடுத்திறமான உடம்புழைப்பும் மூளை உழைப்பும் உள்ளவர்கள் எல்லாரும் நாளொன்றுக்கு மூன்று முறையேனும் இரண்டு முறையேனும் ஏற்கும் அளவாக உணவு கொள்ளல் வேண்டும். சிலர் பகற்காலத்தில் மட்டுமே உண்ண வேண்டும் என்னுங் கொள்கை யுடையவர்களாய்க், காலை பத்து நாழிகைக்கு ஓர் உணவும், அந்திப் பொழுதிற்குச் சிறிது முன்னே ஓர் உணவும் எடுத்தலே நன்றென்று வற்புறுத்திக் கூறுவர். தொழிலின் முயற்சி மிகுதியாயில்லாத பழைய காலத்தில் இம்முறை பொருத்தமாயிருந்தாலுந், தொழிற்பாடு பருகி வரும் இக்காலத்திற்கு அஃது இசையாது. இக்காலத்தவர் தாஞ்செய்யும் பலதிற முயற்சிக்கு ஏற்ப மூன்றுவேளை யுணவெடுத்தலே நலமுடைத்து; இல்லையேல் உடம்பு வலிவு சுருங்கிக் காலம் முதிரா முன்னரே இறப்பர்.இரண்டுவேளை வலியவுணவை நிறைய அடைத்துத் தீனிப்பை முதலான அகவுறுப்புகளைப் பழுதுபடுத்துவதைக் காட்டினும்,மூன்று வேளை மெல்லிய உணவுப் பொருள்களை அளவாக வுண்டு நலமாய் வாழ்தலே மேன்மை யுடைத்து.

இனிக்,காலையிற் பத்து அல்லது எட்டு நாழிகைக்குச் சிறுக உணவெடுத்து,அதன்பிற் பத்து நாழிகை கழித்துப் பகற் பொழுதில் நல்லுணவை வயிறார உண்ணல் வேண்டும்; அதன்பிற் பத்து அல்லது பதினைந்து நாழிகை கழித்து மாலையில் அளவாக உண்ணல் வேண்டும். இங்ஙனம் மூன்றுமுறை எடுக்கும் உணவுகளின் இடையிடையே பத்து அல்லது பதினைந்து நாழிகை கழிய வேண்டுமென்று கூறிய தென்னை யென்றால்,ஒருமுறை உண்டவுணவு நன்றாய்ச் செரிமானத்திற்கு வரச் சிறிதேறக் குறையப் பத்துநாழிகை (4 மணி நேரம்) ஆகின்றன.இப்பத்து நாழிகையும் ஆனபின் தீனிப் பையின்கட் சென்ற உணவு அங்கே நன்றாய்க் கடைப்பட்டுச் சாறுஞ் சக்கையுமாய்ப் பிரிந்து, சாறு மேலேறிச் செந்நீராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/66&oldid=1597298" இலிருந்து மீள்விக்கப்பட்டது