❖ மறைமலையம் 1 ❖ |
மாறி நரப்புக்குழாய்களில் ஓடச், சக்கை, கீழ்க் குடரிற் கழிவாய் இறங்கிப்போகத் தீனிப்பையினிடம் ஒழிவாகி, மறுமுறை இடும் உணவை ஏற்றற்குத் தக்க நிலையின தாகின்றது.அஃது உண்மையேயாயினுஞ்,சில உணவுப் பொருள்கள் மூன்று நான்கு நாழிகை நேரத்திற் செரித்துப் போகப் பசி மிகுதியாயெடுத்தலால்,ஐந்து நாழிகை நேரஞ் சென்றபின் மற்றுமோர் உணவு கொள்ளுதலாற் குற்றம் இல்லையெனிற்;சில பண்டங்கள் விரைவாகவும்,மற்றுஞ் சில பண்டங்கள் நேரம் பொறுத்துஞ் செரிமானத் திற்கு வருதலால் அவ்வவ் பொருள்கள் நன்றாய் அற்றுப் போன தறிந்து திரும்ப உணவு கொள்ளல் வேண்டும்.
உணவுப் பண்டங்கள் பல செரித்தற்கு ஏற்றக்குறைவான பலநேரங்கள் வேண்டப்படுதலை ஆங்கில மருத்துவர் ஒருவர் நன்கு ஆராய்ந்து காட்டியிருக்கின்றார்12. ஒருவர்க்கு வயிற்றில் ஒரு குண்டுபட்டுத் தீனிப்பைவரையில் ஒரு துளையை உண்டு பண்ணிற்று; அத் துளையின் வழியாக அவரது வயிற்றின் அகத்தேயுள்ள தீனிப்பையில் நடக்கும் நிகழ்ச்சிகளை அம் மருத்துவர் கண்டறிந்தார்.அங்ஙனங் கண்டறிகையில்,வேவுவித்த சோறு இரண்டரை நாழிகை அல்லது ஒருமணி நேரத்திலுங்,இனிய சீமை இலந்தைப் பழம் ஒன்றரைமணி நேரத்திலுங், காய்ச்சிய சவ்வரிசிக் கஞ்சி ஒன்றேமுக்கால் மணி நேரத்திலுங்,காய்ச்சிய பால் இரண்டு மணி நேரத்திலும், பச்சைக் பால் இரண்டேகால் மணி நேரத்திலும், பச்சைக் கோசுக்கீரை இரண்டரை மணி நேரத்திலும், அவித்த கோசுக்கீரை நாலரை மணி நேரத்திலுஞ், சீமை அவரை இரண்டரை மணி நேரத்திரலுஞ், வேவுவித்த உருளைக் கிழங்கு மூன்றரை மணி நேரத்திலுங், கேழ்வரகு கம்பு சோளம் தினை முதலான கூலங்களின் அடைகள் மூன்றேகால் மணி நேரத்திலும், வேவுவித்த கூலங்களுஞ் சீமை அவரையும் மூன்றேமுக்கால் மணி நேரத்திலுஞ் செரிமானத்திற்கு வருதலைத் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.இங்கே எடுத்துக்காட்டிய பொருள்களில், ஆக்கிய அரிசிச்சோறு ஒன்றுதான் ஒருமணிநேரத்திற் செரித்துப் போவதாயிருக்கின்றது.மற்றைப் பொருள்களுள் மிகுந்த நேரஞ் சென்று செரிப்பது அவித்த கோசுக் கீரை; இது செரிப்பதற்கு நாலரைமணி அல்லது