❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
பதினொன்றேகால் நாழிகை ஆகின்றன. இங்ஙனமாக உண்ட பொருள்களில் ஒன்று செரிக்கும் நேரத்திலேயே எல்லாஞ் செரியாமல் ஒவ்வொன்றுஞ் செரிக்க வெவ்வேறு நேரம் வேண்டியிருத் தலால், ஓருணவுக்கும் மற்றோருணவுக்கும் இடையே நாலைந்து நாழிகை சென்றாற் போதுமென் றுரைத்தல் அமையாது எளிதில் செரிக்கும் ஒரே வகையான உணவை உட்கொள்பவர்கள் மட்டும் அவ்வாறு நாலைந்து நாழிகை கழித்து உண்பது குற்றமாகாது. பலவாறாய்ச் செரிக்கும் பலவகை உணவுப் பண்டங்களைக் கலந்து வளமாகத் தின்பவர்கள் பத்து அல்லது பன்னிரண்டு அல்லது பதினைந் நாழிகை இடையிட்டு உண்பதே நலமுடைத்து. மேலும், ஓருணவுக்கும் மற்றோர் உணவுக்கும் இடையிலும் ஏதொரு சிற்றுண்டியும் அருந்தலாகாது. முன்னுண்டது தீனிப்பையிற் பாதி செரித்துஞ் செரியாமலும் இருக்கையில், மற்றுஞ் சிறிது நடுவிலுண்டாற் சிறிது செரித்ததுஞ் செரியாததும் ஒன்று கலந்து முற்றுமே செரியாதுபோய் நோயை வருவிக்கும். ஆகையால், முதலில் உண்டது முற்றும் அற்று நன்றாய்ப் பசியெடுத்த பின்றான் உணவெடுக்க வேண்டும். இவ்வுண்மை,
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்”
(குறள் 942)
என்று ஆசிரியர் தெயவப் புலமைத் திருவள்ளுவ நாயனாரால் நன்கு வலியுறுத் துரைக்கப்பட்டது.
முன் உண்டது அற்றபடியை உணர்வதற்கு மிக்க பசி உண்டாவதுதான் தெளிவான அடையாளம். உடம்புக்கு உணவு வேண்டிய நேரம் வந்தாற் பசி இயல்பாகவே மிகுந்து எழும். இயற்கையாகப் பசி எடாதவரையில்,உடம்புக்கு உணவு வேண்டுவதில்லை யென்பதனை ஒவ்வொருவரும் நன்றாக நினைவிற் பதித்தல் வேண்டும். பசி எடாமைக்கு இரண்டு ஏதுக்கள் உண்டு.மிகவும் கொழுமையான உணவுப் பொருள்களை அயின்றால்,அவை செரித்தற்கு நெடுநேரஞ் செல்லுமாதலால்; அதனால் ஒருநாள் முழுதுங்கூடப் பசியில்லா திருத்தல் உண்டு.இனி,முறை கடந்து தின்றுவந்த பழக்கத்தாலும்,வேறு சில நோய்களின் கொடுமையாலுந் தீனிப்பையுந் தீனிப்பையிலுள்ள சாறுகளும் வாயிலுள்ள