❖ மறைமலையம் 1 ❖ |
உமிழ்நீருந் தன்மை கெட்டுப் பசித் தீ அவிந்து போதலும் உண்டு. இவ்விரண்டு ஏதுக்களில் எதுபற்றிப் பசியில்லா திருந்தாலும், பசி நன்றாய் எடுக்கும் மட்டும் ஏதொன்றும் உட்கொள்ளாமற் பட்டினி கிடத்தலே நன்று. இங்ஙனம் பட்டினி கிடக்க கிடக்க உடம்பிலுள்ள தீயினால், இரத்தத்திலும் மற்றை இடங்களிலும் கலந்திருந்த நச்சுப் பொருள்களெல்லாம் எரிக்கப்பட்டுப் போகச்,சிலநாளில் உடம்பு செம்மையான நிலைக்கு வந்து பசி நன்றாய் எடுக்கும் பட்டினி கிடந்தவர் பசியெடுத்த வுடனே கண்ட மட்டுங் கண்டகண்ட பொருள்களைத் தின் ன்று விடலாகாது.தம்முடம் புக்கு இசைவான பண்டங்களை முதலிற் சிறுகத் தின்று,வரவரச் சிறிது கூட உண்ணல் வேண்டும். உடம்பு உறுப்புகளின் அமைப்பும்,அவை செய்யுந் தொழிலும் பாகுபடுத்து உணரமாட்டாதவர்கள்,பசி எடாமை கண்டவுடனே, அதன் ஏதுவை ஆராய்ந்து பார்த்துப் பட்டினி கிடவாமற், பசியெடுப் பதற்காக மருத்துவரிடஞ் சென்று மருந்து வாங்கி உண்பவர்களும், நல்ல அறிவாளிகளான மருத்துவர் வேண்டாமென்று தடுத்தாலுங் கேளாமல் உடம்பு மெலிந்து விடுமே உடம்பு மெலிந்து விடுமே என்று கவலைப்பட்டு மேலுக்கு மேல் உண்ண உண்ண வலிந்து புகுத்துபவர்களுமாய் இயற்கைக்கு மாறாய் நடந்து காலம் முதிரா முன்னரே கூற்றுவனுக்கு இரையாகின்றனர்.பட்டினி கிடந்தால் உடம்பு மெலிந்தாலும் நோய் நீங்கிப் பசியெடுத்து நன்றாய் உணவு காள்ளுங்கால் உடம்பு செம்மையான நிலைக்கு வரும்.அதற்கும் பொறுமையாய் இராமற் சோற்றையும் மற்றைப் பண்டங்களையும் மேன்மேல் துறுத்தி அடைத்தல் ஒரு பயனுந் தராமை யோடு அங்ஙனம் உண்பவரை விரைவில் இவ்வுலக வாழ்வு துறந்தேகவுஞ் செய்யும்.
உணவு உண்பது உடலைப் பாதுகாப்ப தன்று. உண்டவுணவிலுள்ள சாறுகள் அத்தனையுஞ் செந்நீரிற் கலந்து உடம்பிற் சேருவதே அதனைப் பாதுகாப்பதாகும்.உண்ட உணவு அங்ஙனம் உடம்பிற் சேராமற் றனித்து நிற்குமாயின் அதுவே நஞ்சாக மாறி அதற்குத் தீமையை விளைவிக்கும். ஆகையால்,உணவு கொள்ளுதலையே எப்போதும் பெரிதாக நினையாது, தமது உடம்புக்கு எவ்வகையான உணவு வேண்டும்,அதனை எப்போது எவ்வாறு உட்கொள்ளல் வேண்டும் என்று