பக்கம்:மறைமலையம் 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
37

வகை தெரிந்து பயன்படுத்துவதே ஆறறிவுடைய மக்களுக்கு அழகாகும். பசியெடாத காலங்களில், அங்ஙனம் ஆன தன் ஏதுவைத் தெளிய ஆராய்ந்து கண்டு, பசியெடுக்கும் அளவும் பட்டினி கிடந்து, பசியெடுத்தபின், முன்னுண்டான சீர்கேடு மிகக் கொழுமையான பண்டங்களை மிகுத்துண்டதனால் வந்ததாயின்; மறித்தும் அவற்றையே தின்னாமல் தமதுடம் பிற்கு ஒத்தவற்றையே உண்ணல்வேண்டும். இதுபற்றியே திருவள்ளுவ நாயனார்,

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு

(குறள். 945)

என்று அருளிச் செய்தனர்.

இனிப், பசியெடாமை நோயால் வந்ததாயின் இடையிடையே வெந்நீர் பருகிக்கொண்டு பட்டினி கிடந்தால் உடம்பில் நோயை விளைவித்த நச்சுநீர் முற்றும் உள்ளுள்ள தீயால் உரிஞ்சப்பட்டுப் போக, நோய் நீங்கிப் பின்னர் நன்றாய்ப் பசி உண்டாகும். நாலைந்துநாள் தொடர்பாகப் பட்டினி கிடக்க மனவலிமை யில்லாதவர்கள் இனிய குடகு நாரத்தம் பழங்கள் சிற்சில ஒருநாளில் இரண்டுமுறை தின்னலாம். அல்லது, வாற்கோதுமை மாவேனுங் கோதுமை மாவேனுங் கலந்து காய்ச்சிய ஆவின்பாலைச் சிறுகப் பருகலாம். இங்ஙனஞ் செய்வதோடு, அந்நோய் நீக்குதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த மருந்தினைத் தக்க மருத்துவர் பாற் பெற்று அருந்துதலும் நன்று. மருந்து அயிலாமலே வெறும்பட்டினி கிடத்தலாலும் மலக்குடரை நாடோறுங் கழுவி விடுதலாலுங், குறிகளை நீராவியிற் காட்டி நன்றாய் வியர்க்க வைத்தலாலும் எத்துணைக் கடுமையான நோயும் விலகும்படி செய்து கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செய்து உடம்பை நலம் பெற வைத்தற்கு மிகுந்த மனவலிவும் ஆழ்ந்த நுனைவும் அறிவும் வேண்டும்; அவையில்லாதவர்கள் அறிவும் பயிற்சியும் அன்பும் மிக்க மருத்துவர்பால் மருந்து வாங்கியுண்டு நோய் நீக்கிக் கொள்ளுதலே செயற்பாலார். நல்ல மருந்துகளை உண்ணுமிடத்தும், பசியின் அளவறிந்து உணவு எடுத்தாற்றான் மருந்தும் பயன்றரும், நோயும் நீங்கும். ஆதலால், ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/70&oldid=1597063" இலிருந்து மீள்விக்கப்பட்டது