பக்கம்:மறைமலையம் 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


2. பொருந்தா உணவுகள் - 1

கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இயற்கை உணவுப் பொருள்கள் மரஞ்செடிகொடிகளின் பயனான இலை பூ காய் கனி விதை விதை கிழங்கு முதலானவைகளேயாம். மக்களேயல்லாமல் அசையும் பொருள்களாகிய எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் இயற்கை உணவான அசையாப் பொருள்களாகிய பயிர் பச்சைகளேயாம். இதனை எதனால் அறிகின்றோமெனின்: அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்ன முயலுங்கால் மெலியது தனதுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மிகவும் விரைந்தோடித் தப்பிப் பிழைப்பதனைக் கண்டு அறிகின்றோம். இவ்வாறு அசைந்தோடும் உயிர்களில் மெலியது வலியதற்கு இரையாகாமல் தப்பியோடிப் பிழைத்தற்கு ஏற்ற உடம்பின் அமைப்பை இறைவன் இயங்கும் உயிர்கள் எல்லா வற்றினிடத்தும் அமைத்து வைத்திருக்கின்றான். ஒவ்வொருகால் மெலியது தப்பிஓட வகையின்றி வலிய வுயிரினிடத்து அகப்பட்டுக் கொள்ளும்படி நேர்ந்தால் அப்போது அஃது அதனை எதிர்த்துப் போராடுதற்கு இசைந்த உறுப்புகளையும் அதற்குக் கொடுத்திருக்கின்றான். மான் மரை கடம்பை யாடு மாடு யானை முதலான உயிர்கட்கு வலிய கொம்புகளையும், முள்ளம்பன்றி பன்றி முதலிய வற்றிற்குக் கூரிய முட்களையும் பற்களையும் முயல், குதிரை முதலியவற்றிற்கு விரைந்த ஓட்டத்தையும், விரைந்தோட மாட்டா நந்து சங்கு யாமை முதலியவற்றிற்கு வலிய ஓடுகளையுந், தேள் பாம்பு முதலியவற்றிற்கு கொடிய நஞ்சையும், ஞெண்டு கெளிறு சுறா முதலியவற்றிற்குக் கத்திரிக்கால் சிலாம்பு வாட்கொம்பு முதலியவற்றையுந் தந்திருக்கின்றான். இங்ஙனமே இன்னும் பலவகையான பூச்சிகள் புழுக்கள் மீன்கள் பறவைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/72&oldid=1566355" இலிருந்து மீள்விக்கப்பட்டது