பக்கம்:மறைமலையம் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

❖ மறைமலையம் 1 ❖

முதலியனவெல்லாந் தம்மின் வலியவற்றிற்குத் தாம் தப்பிப் பிழைக்க உதவியாகும்படி அவ்வவையிருக்கும் இடங்களின் நிறங்களை அவற்றின் உடம்பிற்குத் தந்து, தமக்குப் பகையான உயிர்களின் கண்களுக்கு அவை எளிதிற் புலனாகாதபடி வைத்திருக்கின்றான். சில பச்சிலைப் புழுக்கள் தாம் உறையும் இலைகளின் நிறத்தைப் போலவே இருத்தலால் அவை அவ்விலைகளில் அசைவற்று இருக்குங்கால் அவற்றை அவ்விலைகளின் வேறாய்க் காண்டல் அரிதாகும். தாந்தம் இருக்கும் இடத்தின் அல்லது இடத்திலுள்ள பொருள்களின் நிறங்களை அவற்றைச் சார்ந்த உயிர்கள் பெறும்படி இறைவன் வகுத்தது, அவற்றை மற்ற வலிய உயிர்களின் கண்களுக்குத் தப்புவித்தற் பொருட்டேயாம் என்பது இதனால் நன்கு விளங்குகின்ற தன்றோ? படைப்பின் இயற்கைகளை இங்ஙனங் கருத்தூன்றிப் பார்க்குங்கால், அசைந்து திரியும் ஓர் உயிர் அங்ஙனமே அசைந்து திரியும் மற்றோர் உயிரினைப் பிடித்துக் கொன்று தின்னுதல் இறைவன் திருவுள்ளத்திற்குச் சிறிதும் ஒவ்வாதென்பது தெளியப் படுகின்றதன்றோ?

அவ்வாறானால், புலி கரடி அரிமா முதலான சில மற விலங்குகள் மற்ற உயிர்களைக் கொன்று தின்னுமாறு இறைவன் அவற்றிக்குக் கூரிய பற்களையும் நகங்களையும் வகுத்தது என்னையெனிற்; பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வலிய பெருவிலங்குகள் பல தொகுதிகளாயிருந்தமையின், அவற்றுள் ஒன்றையொன்று எதிர்க்க நேர்ந்தக்கால் அவை தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளுங் கருவி களாகவே கூர்ப்பற்களையும் நகங்களையும் அவற்றிற்கு அமைத்துக் கொடுத்ததல்லாமல், அவற்றால் மற்றை மெலிய உயிர்களை அவை கொல்லுதற்காக வென்று அவற்றைத் தந்திலன், அங்ஙனமாயிற், புலி, கரடி முதலான விலங்குகள் மான் மரை முதலான மெல் விலங்குகளைக் கொன்று தின்னலானது எதனாலெனின் வல்விலங்குகளுள்ளேயே ஒன்றை ஒன்று எதிர்த்துக் கடித்தும் பீறியுஞ் சண்டையிடுங்கால், அவை ஒன்றை ஒன்று கடித்து ஊன்சுவை கண்டுகொண்டமையின், அவ் வல்விலங்குள் தம்மோடொத்த ஏனை வல்விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைச் சுவைத்தல் அரிதாதல் அறிந்து, தாம் எதிர்த்துக் கொல்லுதற்கு எளியவான மெல்விலங்குகளைக் கொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/73&oldid=1569151" இலிருந்து மீள்விக்கப்பட்டது