பக்கம்:மறைமலையம் 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
41

அவற்றின் ஊனைத் தின்று தின்று சுவை கண்டுவரவே, பிறகு அவை எளிய விலங்குகளைக் கொன்று தின்னுதலிலேயே பழகிவிட்டன. பழைய நாளிற் பன்றியிறைச்சியே தின்றறியாத சீனக்காரர், ஒருகால் ஒரு வீடு நெருப்புப் பற்றி எரிகையில் அதில் அகப்பட்டு வெந்துபோன பன்றிகளின் இறைச்சியைத் தற்செயலாய் ஒருவர் சுவை பார்க்க நேர்ந்ததிலிருந்து பன்றி யிறைச்சி தின்னக் கற்றுக் கொண்டார்கள் என்னும் வரலாறும்[1] இவ்வுண்மையை நன்கு நிலை பெறுத்தும். இன்னுஞ், சில தீவுகளில் உள்ள காட்டுமிராண்டிகள் ஒருவரோடொருவர் சண்டையிடும்பொழுது ஒருவரை யொருவர் கடித்து ஊன் சுவை அறிந்தமையின், அது முதல் தமக்கு எதிரானவர்களிற் சிறைபிடித்துக் கொள்ளப் பட்டவர்களைக் கொன்று அவர்களின் ஊனைத் தின்பதிற் பழகி விட்டார்களென்று அறிகின்றோம். மக்களை மக்கள் கொன்று தின்னும் மிகக் கொடிய செயல், அதிற்பழகாத நம்மனோர்க்குப் பெரு வியப்பினையும் பேரச்சத்தினையுந் தருமேனும். அதிற் பழகி வந்தவர்களுக்கு அஃது எளிதாகவே இன்றும் இருக்கின்றது. இத்தன்மை வாய்ந்த மக்கள் சிலர் இருப்பதுகொண்டு, இக் காட்டுமிராண்டிகள் தம்முள் ஒருவரையொருவர் கொன்று தின்னுமாறு கடவுள் ஏன் அமைத்தார் எனவும், மக்களுள் ஒருவர் மற்றொருவரைக் கொன்று தின்னுதல் பொருத்தமேயாம் எனவுங் கூறுவார் உண்டோ! காட்டுமிராண்டிகள் தம்முள் ஒருவரையொருவர் கொன்று தின்னக் கற்றுக் கொண்டது போலவுஞ் சீனக்காரர் பன்றியிறைச்சி தின்னக் கற்றுக் கொண்டது போலவும் புலி கரடி முதலிய வல்விலங்குகளுந் தாம் படைக்கப்பட்ட காலத்தில் ஊன் தின்னாதனவாகவேயிருந்து, அதற்கு நெடுங்காலம் பிற்பட்டே அதனைத் தின்னக் கற்றுக் கொண்டனவென்பது துணியப்படும். இவ்வுண்மையை நாட்டுதற்கு ஒரு சிறந்த மேற்கோள், இக்காலத்தில் ஊன் தின்னுதலையே தமது கொள்கைக்குச் சிறந்ததோர் ஒழுக்கமாகச் சொல்லுங் கிறித்துவ சமயத்தார்க்குரிய வேத நூலிலிருந்தும் எடுத்துக் காட்டுவாம். கிறித்துவர் வேதத்தின் முதல் நூல் முதல் இயலிற்<ref>2<ref> கடவுள் உலகங்களையும் உலகத்தில் உள்ள புற்பூண்டு முதல் மக்கள்

  1. 1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/74&oldid=1597300" இலிருந்து மீள்விக்கப்பட்டது