பக்கம்:மறைமலையம் 1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42

❖ மறைமலையம் 1 ❖

ஈறான எல்லா உயிர்ப் பொருள்களையும் படைத்திட்டபின்னர் மகனை நோக்கி,

“இந்நில உலகம் முழுதும் உள்ள வித்து ஈனும் ஒவ்வொரு பூண்டினையும் மரம் ஈனும் வித்துள்ள பழங்களொடு கூடிய ஒவ்வொரு மரத்தினையும் நான் உனக்குத் தந்திருக்கின்றேன், அவை நினக்கு உணவாகுக.”

“இனி, நிலத்தின்கண் உள்ள ஒவ்வொரு விலங்குக்கும், வானின்கண் உள்ள ஒவ்வொரு பறவைக்கும், நிலத்தன் மேல் நகர்ந்துசெல்லும் ஒவ்வோர் உயிர்ப்பொருளுக்கும் உணவாக ஒவ்வொரு பசிய பூண்டினையும் நான் கொடுத்திருக்கின்றேன்.” என்று கூறியருளினார்: “அவர் சொன்ன படியே ஆயிற்று.” இம்மேற்கோள் கிறித்துவர் வேதபுத்தகத்தின் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்டதாயினும், இதன்கட் காணப்படும் உண்மை கடவுள் உலகங்களையும் உயிர்களையும் படைத்த படைப்பின் பழைய உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுதலால், இஃது எல்லாச் சமயத்தாராலும் பொன்னேபோற் போற்றற்பாலதாயிருக்கின்றது. எனவே, மக்களும் அசைந்துசெல்லும் மற்ற உயிர்களும் முதன் முதற் படைக்கப்பட்ட காலத்து அவையெல்லாம் புற்பூண்டுகளையுங் காய் கனி கிழங்கு விதைகளையுமே உணவாகக் கொண்டு வாழ்ந்தன வென்பதும், அவ்வுயிர்களெல்லாவற்றிற்கும் நிலையியற் பொருள்களான பயிர் பச்சைகளையும் அவற்றின் பயன்களையுமே இறைவன் உணவாக வகுத்தருளின னென்பதும் நன்கு உணரப்படும். மேலும் அசைந்து திரியும் உயிர்களுள் ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்னல் இயற்கைக்கு மாறாயிருப்பதல்லாமலுங் கடவுளின் கட்டளைக்கும் முற்றும் முரணாமென்பதுங் கிறித்துவர்க்குரிய பழைய வேத நூலிலும் புலனாகின்றது. சில வல் விலங்குகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இறைவனால் தரப்பட்ட கூரிய நகங்களையும் பற்களையுந் தம்மைக் காத்துக் கொள்ளுஞ் செயலில் மட்டும் பயன்படுத்தாமற், பிற ஏழை உயிர்களைக் கொன்று தின்னுதற்கும் பயன்படுத்தினால் அஃது அவ் வல்விலங்குகளின் குற்றமாகு மேயல்லாமல், இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/75&oldid=1569153" இலிருந்து மீள்விக்கப்பட்டது