❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
வகுத்த இயற்கைக் குற்றமாதல் ஒரு சிறிதுஞ் செல்லாதென்க. இங்ஙனமே, இறைவனருளாற் பெற்ற பகுத்தறிவை மக்கள் பலர் தீய வழிகளிற் பயன்படுத்துதல் அவர் தங் குற்றமே யாகுமல்லால், அஃது இறைவன் வகுத்த இயற்கையால் வந்த குற்றமென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ! இவ்வுண்மையைச் செவ்வையாய் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைக் கொன்றுதின்னும் இயற்கையுடையனவாக அவை கடவுளால் முதலில் அமைக்கப்படவில்லை யென்பது தெற்றென விளங்காநிற்கும். அசைந்து திரியும் உயிர்கள் ஒவ்வொன்றுந் தம்மைத் தம்மின் வலிய உயிர்களினின்றும் பாதுகாத்துக் கொள்ளுதற்கேற்ற உறுப்புகளின் அமைதியோடு படைக்கப்பட்டிருத்தலால், அவை ஒன்றையொன்று இரையாகப் பிடித்துத் தின்னுதல் இறைவன் திருவுளத்திற்குச் சிறிதும் ஒப்பாகாதென்றே கடைப்பிடிக்க.
இனிப், புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் முதலியனவோ அசைந்துதிரிய மாட்டாமல் ஒவ்வோர் இடங்களில் நிலையாக நிறுத்தப்பட்டிருத்தலானும், அவற்றின்கண் உள்ள இலை பூ காய் கனி விதை முதலியவற்றை அசைந்து திரியும் மற்றை உயிர்கள் பறித்துத் தின்ன வரும்போது அவற்றோடு அவை சண்டையிடக் காணாமையானும் இயங்கும் உயிர்கள் அத்தனைக்கும் உணவாகக் கடவுளால் தரப்பட்டவை பயிர் பச்சைகளேயா மென்பது இனிது புலப்படவில்லையா? அஃது உண்மையேயென்றாலும், பயிர் பச்சைகளும் உயிருள்ள பொருள்களோயாகையால் அவற்றை உணவுக்காக அறுத்தலும் பறித்தலும் பிடுங்கலும் குற்றமல்லவோ வெனிற், குற்றமல்ல. மரஞ் செடி கொடிகளின் பயன்களை அவற்றினின்றும் அகற்றும்போது, அவை மற்றை இயங்கும் உயிர்களைப்போற் றுடிதுடித்துக் கத்தித் துன்புறக் காணாமையானும், இயங்கும் உயர்களின் உடம்பினின்று நகம் மயிர் முதலியன களையப்படும்போது அவை துன்புறாமை போலப் பயிர்பச்சைகளுந் தம்மினின்று நீக்கப்படும் பயன்களாற்றாஞ் சிறிதுந் துன்புறமாட்டா என்பது உணரப் படுதலானும்,