பக்கம்:மறைமலையம் 1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48

❖ மறைமலையம் 1 ❖

என்று அருளிச் செய்தனர்.எனவே,ஊன் தின்பனவற்றிற்கு எல்லா நோய்களும் எல்லாத் துன்பங்களும் வருமென்றும்,பயிர் பச்சைகளையும் அவற்றின் பயன்களையும் அருந்துவன வற்றிற்கு எல்லா நலங்களும் எல்லா இன்பங்களும் வருமென்றும் உணர்ந்து கொள்க.

இனி, ஊன் உடம்புகளின் வளர்ச்சிக்கும் நிலை பேற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படும் முதற் பொருள்கள்: கந்தகம், எரிகந்தகம், தீக்கல், சாம்பருப்பு, உவர்மண், கண்ணம், காந்தம், இரும்பு, காந்தங் கலந்த செம்பு, ஈயம் முதலியனவாகும். உயிரற்ற இவ் வன்பொருள்களை அப்படியே தின்று செரிக்கச் செய்து உடம்பிற் சேர்த்துக் கொள்ளத்தக்க ஆற்றல் மக்கள் முதல் ஈ எறும்பு இறுதியான அசைந்து திரியும் உயிர்களின் தீனிப்பைக்கு இல்லை.எவ்வளவு வல்லமையுடைய வனேனும் அவன் இரும்பையுங் கந்தகத்தையுங் காந்தத்தையுந் தின்று உயிரோடி ருத்தல் முடியாது. இம் முதற்பொருள்களை மக்களும் மற்றை அசையும் உயிர்களும் நேரே தின்னல் இயலாதாயினும், வேறு எந்த வகையிலாயினும் இவைகளை உடம்பிற் சேர்த்தாற்றான் அவை நிலைபெறும். மற்று, இம்முதற்பொருள்கள் உடம்பிற் பொருந்தி அதனை உரப்படுத்துமாறு, அவற்றை உட் கொள்ளும் வழிதான் யாதெனின்; மக்களாலும் மற்ற அசையும் உயிர்களாலுஞ் செய்யலாகாத அவ்வழியை இறைவன் இவ் வுயிர்கண்மேல் வைத்த இரக்கத்தால் மரஞ் செடி கொடிகளில் அமைத்து வைத்திருக்கின்றான். மரஞ் செடி கொடிகளில் மட்டுமே, நிலத்தின்கண் உள்ள இரும்பு எரிகந்தகம் காந்தம் முதலான முதற்பொருள்களை நுண்ணிய வடிவில் வேர்களின் வாயிலாக இழுத்துத் தம்முடம்பிலும் அவ் வுடம்பின் உறுப்புகளாகிய அரை, கோடு, வளார், தளிர், இலை, பூ, பிஞ்சு, காய், கனி, கிழங்கு, விதை முதலானவற்றிலுஞ் சேர்த்துக் கொள்ளும் ஆற்றல் அமைந்திருக்கின்றது. இவ்வாறு அவை சேர்க்கப் பட்டிருக்கும் புற்பூண்டுகளையும் அவற்றின் பயன்களையும் அசைந்து செல்லும் உயிர்கள் உணவாக உட்கொள்ளுதலால் அவற்றின் கண் உள்ள அம் முதற் பொருள்கள் எளிதிலே செரித்து அவ் வுயிர்களன் உடம்புகளிற் கலந்து அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/81&oldid=1569241" இலிருந்து மீள்விக்கப்பட்டது