❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
தின்னாத யாடு மாடு முதலியவற்றின் உடம்புகள் தூயனவாயிருத்தலின் அவற்றின் ஊனைத் தின்னுதல் பொருத்தமாகுமன்றோ வெனின், ஊன் தின்னும் உயிர்களின் உடம்பைவிட அவற்றின் உடம்பு தூயனவென்று கொள்ளப்படுமே யல்லாமல், ஊன் என்ற பொதுவகையால் நோக்குமிடத்து யாடு மாடு முதலியவற்றின் தசையும் அருவருக்கத்தக்க முடைநாற்றமும் நச்சு நீரும் உடையனவே யாகும். மருத்து நூற் புலமையில் மிகச் சிறந்துவிளங்கும் ஒருவர்[1] ஊன் எல்லாம் நச்சுநீர்[2] உள்ளன வென்றும், ஊன் தின்னும் உயிர்கட்கெல்லாம் அந் நச்சுநீர் இரத்தத்திற் கலந்து பல கொடிய நோய்களை வருவிக்கின்ற தென்றும் நன்கு ஆராய்ந்து விளக்கியிருக்கின்றார். அவர் தாமிருக்கும் மருத்துவக் கழகத்தில், மற்ற இடங்களில் தீராத நோய்களை யெல்லாந் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வரும் நோயாளிகளுக்கெல்லாங் காய்கனி கீரை கிழங்கு வித்து முதலானவைகளையும் ஆவின் பாலையும் உணவாகக் கொடுத்து அவர் கொண்ட அக் கொடிய நோய்களைத் தீர்த்து விடுகின்றார் என்றும் அறிகின்றோம். தாஞ் சொல்லும் உண்மைகளை மெய்ப்படுத்திக் காட்டும் இப் புலவர் பெருமானது நூலை ஒரு சிறிது நோக்கு வார்க்கும் ஊன் உண்ணுதலால் வருந் தீமை விளங்காமற் போகாது. ஆகவே, இறைவன் அசைந்து திரியும் உயிர்களுக்கு உணவாக அசைந்து திரியா மரஞ் செடி கொடிகளையும் அவற்றின் பயன்களையும் வகுத்துக் கொடுத்திருக்க, அதற்கு மாறாக நடந்து அசைந்து திரியும் உயிர்களாகிய தமக்குள்ளேயே ஒன்றை ஒன்று கொன்று தின்பன, அங்ஙனந் தின்பதனாலேயே தம்முயிர்க்குத் தீங்கினை வருவித்துக் கொள்கின்றன என்பது புலனாகின்றன தன்றோ? செங்குருதி ஒழுக ஒழுக, உயிர் துடிக்கத் துடிக்கக் கொல்லுங் கொலைத் தொழிலால் வரும் ஊன் தன்னைத் தின்னும் உயிரைக் கொல்லாது விடுமோ? கொலைத் தொழிலால் வருவன கொலையினையே விளக்கும் என்பதனை துணர்ந்தன்றோ பட்டினத் தடிகளும்,
“கொன்றனை அனைத்தும் அனைத்தும் நினைக்கொன்றன
தின்றனை அனைத்தும் அனைத்தும் நினைத்தின்றன”
(பட்டினத்தார்)