❖ மறைமலையம் 1 ❖ |
பயிர் பச்சைகளின் வலிவான பகுதி முழுவதும் அவற்றைத் தின்னும் யாடு மாடு முதலிய விலங்குகளாற் பயன்படுத்தப்பட்டுப் போக,அவ் வுயிர்களைக் கொன்றபின் அவற்றின் தசையில் மிஞ்சியிருப்பன அவற்றின் சக்கைகளே யாகும். இந்தச் சக்கைகள் உள்ள இறைச்சியைத் தின்பதனால் மக்களுக்கும் புலி கரடி ஓநாய் சிங்கம் முதலான உயிர் களுக்கும் யாது வலிமை வரப்போகின்றது!
உலகத்தின்கண் நடைபெறுங் கடுமையான தொழில்க ளெல்லாம் புற்பூண்டுகளைத் தின்னும் விலங்கினங்களினாலேயே செய்யப்படுகின்றன. எருது, குதிரை, கோவேறு கழுதை, யானை, ஓட்டகம் என்னும் உயிர்கள் புல்லையும் வைக்கோலையுந் தின்று குளிர்ந்த தண்ணீரைப் பருகுகின் றனவே யல்லாமல் மற்ற உயிர்களைக் கொன்று தின்னக் கண்ட தில்லையே. அவ்வாறிருந்தும், அவைகள் நாடோறும் ஆங்காங்குச் செய்யும் உழைப்பான தொழில்களைப் போல், இறைச்சி தின்னும் புலி, கரடி. சிங்கம், ஓநாய் முதலான மற விலங்குகள் செய்யக் கண்டதுண்டோ? இவைகள் கூர்ம் பற்களும் நகங்களுங் கொடுஞ்சினமும் உடைமையால் உலிமை யுடையனபோற் காணப்படுகின்றனவே யல்லாமல் உண்மையில் அவை அஃது உடையன அல்ல. பெருஞ் சுமை ஏற்றிய ஒரு பெரு வண்டி நுகத்தின் ஒரு பக்கத்தில் ஓர் எருத்து மாட்டினையும் மற்றொரு பக்கத்தில் ஒரு புலி அல்லது ஒரு சிங்கத்தினையும் பூட்டி இருபது நாழிகை வழி நடத்தினால் எருதைப் போற் சிங்கம் அதனை ஒறுத்து இழுக்குமோ? ஒரு நாழிகை வழிகூட அஃது இழுக்க மாட்டாது. இன்னும், புல்லையுந் தழைகளையும் மேய்ந்து அருவி நீரைக் குடிக்குங் காண்டாமிருகம் என்னுங் கல்யானையின் வலிமையை என் என்பேம்! இது பெரிய மரங்களையுந் தன் முகத்திலுள்ள கொம்பால் தகர்த்தெறிவ தோடு,அம்மரங்களின் வலிய கிளைகளையுந் துகளாக நுறுக்குகின்றது.யானையோ மலை முகடு களிலுள்ள பெரிய பெரிய தேக்குமரம் பாலைமரம் ஆச்சாமரம் முதலியவைகளை யெல்லாந் தனது தும்பிக்கையால் எளிதாக எடுத்துக் கொண்டுவந்து மலையின் அடி வாரங்களிற் சேர்க்கின்றது.