❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
நீண்ட பெரும் பாலைநிலங்களை யெல்லாங் கடந்து சென்று வாணிகஞ் செய்வதற்கு உதவி புரிந்து வரும் ஓட்டகங்களின் உதவி எவ்வளவு பாராட்டத் தக்கதாயிருக்கின்றது! புல்லையுந் தழைகளையுந் தின்னும் இவ்விலங்குகளின் உதவியின்றி மக்கள் உயிர் வாழல் முடியுமோ! தூய தீம்பாலைத் தரும் ஆன் நமது நல்வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாத தாயிருக்கின்றது! இவ் வினிய விலங்குகளைப்போல் உயிர்களைக் கொன்று தின்னுங் கொடிய விலங்குகள் எந்தவகையாலேனும் நமக்குப் பயன்படு வதுண்டோ! பயன்படாமை மட்டுமா! அவைகள் மக்களயையும் அடித்துக் கொல்லுங் கொடிய இயற்கை யுடையனவாகையால், அவைகள் இருக்கும் டங்களைக் கண்டால் மக்கள் எவ்வளவு திகிலடைந்து நடுங்குகின்றனர்! இவைகளைப் போலவே, ஊன் தின்னும் மாந்தரும் பயன்படமாட்டார்: அவர்களுக்குக் கொடிய தன்மையும், அதனால் வலிமைக்குறைவும் அயர்வும் உண்டாதலால் அவர்கள் மற்றவர்களோடு அன்புடன் அளவளாவிப் பயன்படுந் தொழில்களையுஞ் செய்யமாட்டார்.
ஆனாற், சைவ உணவு கொள்ளும் மக்களோ கடவுள் வகுத்த இயற்கைக்கு இசைந்து நடப்பவர்களா யிருத்தலால், அவர்கட்குக் கொடுந்தன்மை உண்டாகாது; அவர்கள் எடுக்கும் உணவு தூயனவாய் அமிழ்தவடிவாய் இருத்லால் அவர்கள் உடம்பு தூயனவாய் நோய் அணுகாதனவாய் எத்தகைய வருத்தமான தொழில்களையுஞ் செய்து முடித்தற் கேற்ற வலிவு வாய்ந்தனவாயிருக்கும்; அவர்களுடைய மூளை தூயதாய் இருத்தலால் அதனைப் பற்றிக் கொண்டு நிகழும் அவருடைய அறிவுந் தூயதாய் நுட்பம் பொருந்திய தாயிருக்கும். இவ்வுண்மையை விளக்குதற்குச் சில உண்மை வரலாறுகளை இங்கெடுத்துக் காட்டுகின்றாம்.
நீண்டவழி நடப்பதிற் புகழ்பெற்ற ஒருவர்7 சைவ வுணவே உட்கொள்பவர். இவர் நான்குமுறை நீண்டவழி நடந்து பந்தயம் பெற்றதோடு, 1905 ஆம் ஆண்டு ஐந்தாம் முறையாக ஒரு போர்மறவர் கூட்டத்தோடு நடந்து வென்று பரிசில் பெற்றார். வழிநடந்து பரிசில் பெற்றவுடனே இவரை ஒரு பெயர் பெற்ற