பக்கம்:மறைமலையம் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
53

கொட்டில்களிற் கொல்லப்பட்டுத் தொங்கக் கட்டியிருந்த அவற்றின் இறைச்சியை யான் பார்த்தபோது, அவற்றில் உணவுக்காகும் பகுதியைவிட நோயையுந் துன்பத்தையும் விளைவிக்கும் பகுதிகளே மிகுந்திருத்தலை உணர்ந்தேன்."

"வித்துக்கள் பழங்கள் பருப்புகள் காய்கறிகளையே யான் உண்ணுகின்றேன். காய்ச்சிய வெந்நீரையேனுங் காய்ச்சி வடித்த தண்ணீரையேனும் பருகுகின்றேன். சுருட்டுகளேனுஞ் சிறு சுருட்டுகளேனும் யான் பிடிப்பதும் இல்லை. கொடி முந்திரிச் சாறேனும் மயக்கந்தருஞ் சாராயங்களேனும் யான் குடிப்பதுமில்லை. தேத் தண்ணீருங் காப்பித் தண்ணீரும் யான் முற்றுமே விலக்கி விட்டேன். ஏனெனில், இவற்றில் உணவாகத்தக்கது எதுவுமே இல்லை. அவற்றைப் பயன் படுத்துவது நமது இயற்கைக்கு முற்றும் மாறாயிருக்கின்றது."

நீண்டகாலம் உயிர்வாழ்ந்த முதியோரின் பழக்க வழக்கங்கள் இங்ஙனம் இருத்தலை யறியுங்கால் ஊன் உண்ணுதலால் வருந் தீமையுங் காய்கறிகளை யுண்டலால் விளையும் நன்மையும் நன்கு விளங்குகின்றன அல்லவோ! இனிக்; காய்கறிகளை உணவாகக் கொள்ளும் மக்கள் ஒருவர் இருவர்க்கு மட்டுமே இந் நன்மைகள் விளைகின்றன வென்று நினைத்த லாகாது; காய்கனி கீரைகளையே உணவாக அருந்திவரும் பழக்கமுடைய மக்கட் கூட்டத்தார் பலரும் இத்தகைய நன்மைகளையே அடைந்து வருகின்றனர்; இவ் வுண்மையை விளக்குதற்குஞ் சில இங்கு எடுத்துக் காட்டுவாம்:

"கார்ப்பேத்தியா மலைப்பக்கங்களிலிருக்கும் மக்கள் உலகத்திலுள்ள ள மாந்தரில் மிகச் சிறந்த சுருசுருப்பும் வலிமையும் வாய்ந்தவர்களாயிருக் கின்றனர். அவர்கள் ஓட்டென்னும் அரிசியுங் கோதுமை அப்பமும் உருளைக் கிழங்குமே எந்நாளும் உண் உயிர் வாழ்பவர்கள்.நெப்போலிய மன்னனுக்கு இம் மக்களிற் பலர் போர் மறவராய் அலுவல் பார்த்தனர். அப்போது அவர்கள் நாள் ஒன்றுக்கு நாற்பது நாழிகை வழி நடந்து, கடும்போர் புரிந்து மறுாநட்காலையில் மறுபடியும் போர் புரிதற்குத் தக்க ஆற்றலும் புதுமையும் வாய்ந்திருந்தனர்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/86&oldid=1597306" இலிருந்து மீள்விக்கப்பட்டது