பக்கம்:மறைமலையம் 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
57

கிறார்கள். அவ்வாறு இயல்பாகவுள்ள களிம்பு துரு முதலான நச்சுப் பொருள்களும் உணவிற் கலந்து சென்று தீனிப்பையைக் கெடுத்துச் செந்நீரையும் நஞ்சாக்கு கின்றன. எங்ஙன மென்றாற், செம்பு இரும்பு ஈயம் முதலான முதற் பொருள்களை நேரே ஏற்றுச் செரிக்கச் செய்யும் ஆற்றல் மக்களின் தீனிப்பைக்கு இல்லை யென்பதனை முன்னரே காட்டினாமாகலின், இம் முதற் பொருள்களொடு கலந்துவந்த சோறு கறி குழம்பு மிளகுநீர் முதலியவற்றைத் தீனிப்பை அரைத்துச் செரிக்கச் செய்யமாட்டாமற் புண்பட்டு ஓய்ந்து போதலால், உண்டஉணவு செரியாமை யொடு வயிற்றில் தீராவலியும் உண்டாகின்றது: அம்மட்டோ, அம் முதற் பொருள்களிலுள்ள களிம்புந் துருவுமாகிய நஞ்சும் அவ்வுணவிற் கலந்திருத்தலால், அஃது இரத்தத்திற் கலந்து மயக்கஞ் சோகை நீரிழிவு வள்ளைத்தொழுநோய் முதலான பொல்லாத நோய் களையும் விளைவிக்கின்றது. ஆதலால் மட்பாண்டங்களைத் தவிர வேறு செம்பு பித்தளை ஈயம் அலுமீனியம் முதலியவற்றிற் செய்த கலங்களை உணவு சமைக்கும் ஏனங்களாகச் சிறிதும் பயன்படுத்தலாகாது. சிறப்பு நாட்களிற் பலர்க்கு மிகுதியாகச் சமைத்தற் பொருட்டு அவற்றை ஒரோவொருகாற் பயன்படுத்த வேண்டி வந்தால், அவற்றில் ஆக்கிய உணவு உட்கொள்ளு தலால் வருந் தீமையை உடனே விலக்குதற்கு வழிதேட வேண்டும். அவ்வழியா தெனின், அவற்றின் ஆக்கிய உணவைச் சரிக்கும் அளவாய்ச் சிறுக உண்டு மறுநாட்காலையில் மலக்குடரைக் கழுவித் துப்புரவு செய்து, ஒருவேளை பட்டினிகிடத்தல் வேண்டும்; அம் முதற்பொருளின் களிம் பாகிய நஞ்சு செந்நீரில் ஏறாமைப் பொருட்டு நல்ல எலுமிச்சம்பழச் சாற்றை அருந்துதல் வேண்டும். இவ்வளவும் உடனே செய்தால் அக் கலங்களிற் சமைத்த உணவை உண்டதனால் வருந்தீமைக்குத் தப்பலாம்.

இனிச், சைவரும் பார்ப்பனரும் எடுக்கும் உணவுப் பண்டங்களிலுஞ் சில விலக்கற்பாலன. மிளகாய் புளி உப்பு கடுகு முதலிய பொருள்களை இவர்கள் கறிகுழம்புகளிற் பெருகச் சேர்த்துண்ணக் காண்கின்றோம். இவைகளும், சிலர் அடுத்தடுத்துத் தின்னும் வெற்றிலை பாக்குச் சுண்ணமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/90&oldid=1597308" இலிருந்து மீள்விக்கப்பட்டது