பக்கம்:மறைமலையம் 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62

❖ மறைமலையம் 1 ❖

அவர்கள் இதழ்களில் இறைவன்அமைத்த அழகிய சிவப்புநிறம் மாறி அழகற்ற கறுப்பு நிறம் ஏறியிருப்பதுடன்,அவர்கள் வாயிலிருந்து புகையிலையின் தீநாற்றமும் அருகிருப் பவர் பொறுக்கக் கூடாமல் வீசுகின்றது: மூக்குத்தூளை மூக்கினு நுழைப்பவர்களைப் பார்த்தாலலோ மிகுந்த வெறுப்பு உண்டாகின்றது;அவர்கள் மூக்குத் தொளையிற் சளியும் மூக்குத்தூளுங் கலந்து ஒழுகுதலும்,ஒழுகும் அது மேலணிந்த உடைகளில் வடிந்து கறையாகி நாற்றம் வீசுவதும் எவர்க்குத்தாம் அருவருப்பைத் தரா! இனிப்,புகையிலையை வெற்றிலையொடு கூட்டிக்கூட்டி மெல்பவர்களின் பற் கறையும்,அதனை வாயில் மென்றபடியாய்ப் பேசும் பேச்சும், இடை யிடையே புறத்தே போய் எச்சில் உமிழ்ந்து வரும் வகையும் எவ்வளவு வெறுப்பைத் தோற்றுவிக்கின்றன! இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்க்குந் திருத்தமான அறிவுந் தூயதன்மையும் வாய்ந்தவர்கள் புகையிலையைக் கனவிலும் நினைவார்களோ! கல்வி கற்குஞ் சிறார் இக்காலத்தில் எங்கே பார்த்தாலும் புகைச் சுருட்டுப் பிடிப்பதைக் கண்டு தூயதன்மை யுடையவர்கள் எவ்வளவு வருத்தமுறு கின்றார்கள்! ஆகையாற்,சிறியோர் முதற் பெரியோர் ஈறான எத்திறத்தவரும் புகையிலையைத் தாந்தொடாமல் தூயரா யிருப்பதொடு,பிறரும் அதனைத் தொடாபடி செய்வது இன்றியமையாத கடமையா மென்க.

இனிக்,கஞ்சா இலை புகையிலையினுங் கொடியதாய் உடம்பின் வலிவைக் குறைத்து இரத்தத்தை நஞ்சாக்கி அறிவை மயக்குதலால் அதனைப் பயன்படுத்துதலுஞ் சிறிதும் ஆகாது. கஞ்சாப் புகை பிடிப்பவர் துறவிகள் ஆவரெனவும் அதனால் அவர்க்குப் பேரின்பக் காட்சிகள் புலனாமெனவுந் தவறாக எண்ணி நடப்பவர் பலர் உண்டு. கஞ்சாப் புகை பிடிப்பவர் முகத்தைப் பார்த்தால் அவர் உயர்ந்தவராகக் கருதப்படுதுற்கு உரிய அடையாளம் எள்ளளவும் இலராதல் நன்கு விளங்கும்.இயற்கைக்கு மாறாய்க் கண்கள் குன்றிமணிபோற் சிவந்து கன்னம் ஒட்டி மயக்கத்தாற் றடுமாறிய சொற்கள் உடையவராய், அருகிற் செல்வார்க்குப் பொறுக்க முடியாத முடை நாற்றமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/95&oldid=1569169" இலிருந்து மீள்விக்கப்பட்டது