பக்கம்:மறைமலையம் 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
65

விட மூளையிலேயே அந்நஞ்சு மிகுந்து இறக்கக் கண்டார்.இங்ஙனமே இவர் செய்த ஆராய்ச்சி களிலிருந்து சாராய மானது குடித்தவுடனே இரத்தத்திற் கலந்து மூளைக்குச் சென்று அதனைக் கெடுக்கும் உண்மை தெளியப்பட்டது.

இனிச், செரிமானமாகாத வலிய உணவுப் பொருள்களைச் செரிக்கச் செய்தற்காகச் சாராயங் குடிக்கின்றோம் என்றாலும் பொருந்தாது. செரிமான மென்பது யாதென்றால், உண்ட உணவுப் பொருள் பல கூறுகளாகப் பிரிந்து செந்நீரிற் கலத்தலேயாம் உண்ட பொருள் அவ்வாறு பிரியாமல் அப்படியே யிருக்குமானால் அது செரிமானமாகவில்லை யென்று சொல்லப்படும். ஒரு பொருள் பிரிவுபடாமல் முழுமை யாயிருக்க வேண்டுமானால் அதனைச் சாராயத்தில் இட்டு வைக்கின்றார்கள். ஒரு பழத்தையாவது அல்லதொரு மீனை யாவது அல்லதோர் இறைச்சித் துண்டத்தையாவது ஒரு குப்பிச் சாராயத்தில் இட்டு வைத்தால் அது பல பகுதிகளாகப் பிரிந்து கெட்டுப் போகாமல் அப்படியே முழுமை யாயிருக்கும். அதுபோலவே,சாராயத்தொடு சேர்த்து தீனிப் பையிலிருக்கும் உணவுப் பொருளும் அப்படியே முழுமை யாயிருக்கும் அல்லாமல் அது பல பகுதிகளாகப் பிரிந்து, இரத்தத்திற் கலக்கமாட்டாது கலவாதாகவே, உண்ட வுணவு செரியாமல் நோயை வருவிக்கும் இதனையும் ஆங்கில மருத்துவர் பல முறையும் ஆராய்ந்து பார்த்து உறுதிப்படுத்தி யிருக்கின்றனர். ஆகையால், ஒருவகையிலும் பயன்படாமல், உடம்பையும் உயிரின் அறிவையும் பாழாக்குதற்கு மட்டும் முன் நிற்குஞ் சாராயத்தைக் குடித்தலினும் வேறு நிரயத் துன்பம் இல்லாமையால் அதனை எவருங் கனவினும் நினைத்தலாகாது.

இதுகாறுங் கூறியவையெல்லாம் பொருத்தமேயென் றாலும் நமதுடம்பிலுள்ள உறுப்புகளை வலிவேற்றி ளர்ப்பதற்குரிய முதலுணாவிலுள்ள கரு இறைச்சியில் மிகுந்திருத்தலால் அதனை ஆகாதென விலக்குதல் உடம்பின் நலம்பேணுதற்கு இசையாதாய் முடியுமேயெனின்; அறியாது கூறினாய், முதலுணாவின் கரு இறைச்சியில் மட்டுமே இருப்பதன்று; கோதுமை, வாற்கோதுமை, அவரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/98&oldid=1597312" இலிருந்து மீள்விக்கப்பட்டது