பக்கம்:மறைமலையம் 10.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

10. திருவள்ளுவர் வாழ்க்கை

திருவள்ளுவ நாயனார் தம் மருமை மனைவியார் பாப்பம்மையாரோடு அன்புடன் அளவளாவி இல்லற வாழ்க்கையினை இனிது நடாத்தப் புக்கபின், அதனை இடர்ப்படாது நடத்துதற்கு இன்றியமையாது வேண்டிய பொருள் ஈட்டுதற்கருவியாவது யாதென ஆராயலானார். உலகியல் வாழ்க்கைக்கு முதலதான உணவுப் பொருளைத் தரும் உழவு தொழிலே எல்லாத் தொழில்களினுஞ் சிறந்ததென முடிவுகண் டுரைத்தாராயினும், உழவினைச் செய்யுங்கால் ஓரறிவுயிர்களான

பல்வகைப் புற்பூண்டுகளுங்களைந் தெறியப்படுதலானும், ஈரறிவுயிர்களான நத்தை கிளிஞ்சில் முதலியன நசுக்குண்டு இறத்தலானும், மூவறிவுயிர்களான எறும்பும் அட்டையும் மிதியுண்டு அழிதலானும், நான்கறி வுயிரான நண்டும் ஐயறிவுயிர்களான மலங்கும் பாம்பும் ஏரின்கொழுவாற் கிழிவுண்டு மாய்தலானுங், கொல்லா அறத்தினையே முதலறமாய்க் கைக்கொண்ட தமக்கு அவ்வுழவு தொழில் ஆகாமையினை ஆய்ந்துணர்ந்தார்.

இனி, ஓர் அரசன் கீழாயினும் ஒரு பெருஞ்செல்வரை அடுத்தாயினும் ஒரு தொழில் புரிந்து பொருள் ஈட்டலா மெனின், அவர் ஏவிய வழியன்றிச், தமக்கென ஓர் அறிவுந் தமக்கென ஒருசெயலும் இல்லா ஒரு மரப்பாவை போல் இயங்கி, எந்நேரமும் அச்சத்திலுங் கவலையிலும் ஓய்வின்றி வாழ்நாட் கழிக்கவேண்டி வருமாகலின், அதுவுந் தமக்கு ஆகாதென உணர்ந்தார். இவரது மனநிலை இன்னதாதல்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர்”

என்றும்,

(குறள் 1033)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/288&oldid=1579913" இலிருந்து மீள்விக்கப்பட்டது