பக்கம்:மறைமலையம் 11.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

❖ - 11❖ மறைமலையம் – 11

உரைமாலை :

9. புகழ் மாலை

"மறைமலையடிகள் யார்?” சுவாமி வேதாசலம் அடிகள் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர். அவரது பழைய பெயர் நாகை வேதாசலம் பிள்ளை என்பது அற்றை நக்கீரனாரும் பிற்றைச்சிவஞான முனிவரனாரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராக போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யாரும் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவதுண்டு வேதாசலனார் தமிழ் - செந்தமிழ் - சங்கத்தமிழ்-என்ன அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையை தமிழ் நாட்டுக்கு ஊட்டியபெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; வடமொழியும் தெரிந்தவர்.

ஈழக் கதிரைவேற் பிள்ளைக்கும் நாகை வேதாசலம் பிள்ளைக்கும் அடிக்கடி நிகழ்ந்த வாதப்போர் இளமையில் இவருடன் கலந்து உறவாடிய என்னை விடாமல் தகைந்தது.பின்னே 1910 ஆம் ஆண்டில் சிந்தாதிரிப்பேட்டையில் வேதாசலனார் சொல்லமிழ்தைப் பருகும் தவமுடையவன் ஆனேன். அவர் தமிழ் உடலும் தமிழ் உரையும், குரலும், தமிழ்ப் பொருளும் என்னை அவர்தம் தோழனாக்கின; தொண்டனாக்கின.

வேதாசலம், அடிகளாகிப் பல்லாவரத்தை உறைவிடமாகக் கொண்டபோது அடிகள் ஒருநாள் இராமநாதபேட்டை நண்பர் சிலரை வரவழைத்தார்; பகலில் விருந்தளித்தார்; மாலையில் திரிசூலத்தில் சிவவிருந்தளித்தார். தமிழும் சிவமும் ஒன்றிய மறைமலை அடிகளாரின் விருந்து மறக்கற்பாலதன்று.

முன்னாளில் மறைமலையடிகள் அடிக்கடி இராயப் பேட்டை போதருவர்; குகானந்த நிலையத்தில் தங்குவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/257&oldid=1580214" இலிருந்து மீள்விக்கப்பட்டது