பக்கம்:மறைமலையம் 12.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

149

நீலம் : (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! இதோ பார்! காவேரி உன்னைத் தேடிக்கொண்டு இங்கே வந்துவிட்டாள்.

அமராவதி : (கண் விழித்து) கண்மணி காவேரி! நெடு நேரம் உன்னை நூல்நிலையத்திற் காக்க வைத்துவிட்டோம்.

(என்று சொல்லி அவள் கையைப் பிடித்தெடுத்து முத்தம் வைக்கின்றாள்)

காவேரி : அம்மா நீங்கள் இவ்வளவு சோர்வுற்றது கண்டு என்னுள்ளம் பதைக்கின்றது! இதனை என் தமையன் அறிந்தால் அவர் உயிர் தாங்கார். கைகடந்து போன ஒரு நிகழ்ச்சிக்காக வருந்தி இன்னும் நெஞ்சைப் புண்படுத்திக் கொள்ளாதீர்கள்! சொல்லொணா அழகிற் சிறந்த உங்களை நேரே கண்டபின் உங்கள் மேற் காதல் கொள்ளாதிருத்தல் என் தமையனால் ஏலுமோ?

அமாராவதி : அங்ஙனமே, அழகும் மனநலங்குண நலங்களும் ஒருங்கே குடிகொண்டு திகழும் ஒரு தெய்வ வடிவினரான நின் தமையனாரை நேரே கண்டபின்னும், அவரது கலையறிவின் திறனைப் பன்னாளும் நேரேயுணர்ந்து வியந்த பின்னும் அவர்மேற் காதல் கொள்ளாதிருத்தல் என்னால் இயலுமோ? சொல், கண்மணி!

காவேரி : அம்மா, உண்மையாகவே அது சிறிதும் இயலாததேதான்.

பகலவற் கண்டவண்டாமரை கூம்பிதழ் பாரித்தலும் நகலொளி வெண்டிங்கள் முன்னின்ற அல்லிநறுமணந்தான் மிகவலர்ந் தோங்கி விளங்கலுங் கண்டிடின் மேன்மைமிக்க மகனொரு மாதையும் மாதோர் மகனையும் வாவல்தப்பே?

அமராவதி : ஐயோ! கண்மணி! எல்லா உயிர்களிலும் இயற்கையாய்க் காணப்படும் இக்காதலன்பின் உயர்வை அறிவார் உலகில் அரியராயிருக்கின்றனரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/182&oldid=1580784" இலிருந்து மீள்விக்கப்பட்டது