பக்கம்:மறைமலையம் 12.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் 12

அம்பிகாபதி யின் கையினை நோவுண்டாக நெருங்கிப் பிடித்துக் குலுக்க, அம்பிகாபதி வெருவி ஏதும் உரையாமற் றன்கையை விடுவித்துக் கொள்கின்றான். எல்லாரும் இதனைக் குறிப்பாற்கண்டு உளங் கலங்குகின்றனர்) ஏடா துத்தி! ஏவலர்களை அழைத்து இலைகளை இடச் சொல்! தத்தையைக் கூப்பிட்டு உணவு பரிமாறும் பொருட்டு இளவரசியையுந் தோழியையும் வருவி!

(சிறிது நேரத்திலெல்லாம் அமராவதி தோழியுடன் உணவு வட்டில் சுமந்து வருகின்றாள்)

அம்பிகாபதி : (உணவு வட்டில் சுமந்துவரும் அமராவதி யின் பேரழகைக் கண்டு தன்னை மறந்தவனாய்)

“இட்டடி நோவ எடுத்தடி கொப்புளிக்க

வட்டில் சுமந்து மருங்கசையக் -

(என்று பாடியது கேட்டுக் கம்பர் பெரிதும் வெருக்கொண்டவராய் அதனை அவன் முடிக்கும் முன்)

66

கொட்டிக்

கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்”

(என்று பாடி முடித்தார்)

அரசன் : (சிறிது வெகுண்டு) நீவிர் இருவீரும் யாரைக் குறித்து இங்ஙனம் பாடினீர்கள்?

கம்பர் : வெளியே தெருவிற் கொட்டிக் கிழங்கு விற்றுக் கொண்டேகும் ஒரு மாதினைக் குறித்துப் பாடினோம்.

அரசன் : ஏடா கடம்பா, தெருவில் எவளேனும் ஒருத்தி கொட்டிக் கிழங்கு விற்றுக்கொண்டு சென்றால், அவளை உடனே இங்கே கொணா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/219&oldid=1581053" இலிருந்து மீள்விக்கப்பட்டது