பக்கம்:மறைமலையம் 12.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

33

அதனாற் கடவுள் வணக்கஞ் சொல்லவே, புலவர் வணக்கமும் அதில் அடங்கும். (எல்லோரும் அம்பகாபதியின் நுண்ணறிவை வியக்கின்றனர்)

கோமாளி : அப்படியானா, சாமிங்களா! எனக்கொரு வரங்கொடுங்க! என் பொண்டாட்டிக்கு ஆம்பிளெ பிள்ளே மேலே ஆசை; எனக்கு பொம்பிளே பிள்ளே மேலேதான் ஆசை; எனக்கு ஒரு பொம்பிளே பிள்ளெக்கி வரங்கொடுங்க! புலவர்கள் : (குலுங்கச் சிரித்து) அப்படியே தந்தோம்.

அரசன் : ஏடா, துத்தி! வாயைமூடு. சிவபூசையிற் கரடியை விட்டோட்டுதல் போற் புலவர்கள் பேச்சினிடையே ஏதும் உளறாதே! (அவன் வாயை மூடிக்கொண்டு அச்சமுற்றவன் போல் நிற்கக் கண்டு எல்லோரும் நகைக்கின்றனர்)

கூத்தர்: முதற் செய்யுளிற் போந்த முழுமுதற் கடவுள் வணக்கத்திற்குப் பின்னிரண்டு செய்யுளிற் போந்த திருமால் வணக்கம் மாறாயிருக்கின்ற தன்றோ? என்ற வினாவுக்கு விடை தரல்வேண்டும். (என்று கம்பரை நோக்கிக் கூறக் கம்பர் தம் மகனை நோக்கல்)

அம்பிகாபதி : காணவுங் கருதவும் படாத முழுமுதற் கடவுளை வாழ்த்துவது முகமனே யாதலால், சத்துவ குணத் தின் பாற்பட்டுக் காணவுங் கருதவும் எளிதாக நம்ம னோர்க்குத் திருமால் வடிவிற் றோன்றிய அம்முதற் கடவுளைப் பின்னிரண்டு செய்யுட்களில் வணங்கியது மாறுகோளாகாது.

சைவசமயப் புலவர் : அற்றேல், முழுமுதற் கடவுளை வாழ்த்திய முதற் செய்யுள் முகமனே யன்றி உண்மையன் றென்பது அம்பிகாபதியாரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அது நிற்க, முக்குணங்களுங் கடந்த முழுமுதல் அம்முக் குணங்களுள் ஒன்றான சத்துவத்தின் பாற்பட்டுத் தன் பெருமை குன்றிச் சிறுமை எய்திய தெனல் அதன் இறைமைக்கு இழுக்காம். அங்ஙனஞ் சிறுமைப் பட்ட திருமாலை முதல்வராக இசைப்பது யாங்ஙனம் பொருந்தும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/66&oldid=1580668" இலிருந்து மீள்விக்கப்பட்டது