பக்கம்:மறைமலையம் 13.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

89

ஒருத்திக்கு உருக்கத்தோடு உண்மையாகவே தரப்பட்ட தாய் இருந்தாலும், அக்கட்டிலின்மேல் அரைவரிசையாகச் சாய்ந் திருக்கும் உருவின் மிக உயர்ந்த அழகைக்கண்டதும் அதனாற் கவரப்பட்டுச் சிறிதுநேரம் மயங்கினான். இம்மண்ணுலகத்திற் றோன்றிய வடிவத்தையன்றி, ஏதோ மேலுலகத் திலிருந்து வந்த ஓர் அழகிய தோற்றத்தைத் தான் உண்மையிலே காண்பதாகச் சிறிதுநேரம் நல்லானுக்குத் தோன்றியது; அவ்வளவுக்கு இவ் வுருவின் மேல்வரிகள் எல்லாம் துவண்டு நீண்டு மெல்லியனவாய் இருந்தமையே யன்றியும், முகத்திலும் எல்லையற்ற பேர் எழில் குடிகொண்டு விளங்கியது.

நல்லான் ஓசைப்படாமல் மெல்ல அவ்வறையின் கதவைத் திறந்த நேரத்தில் குமுதவல்லி உண்மையிலே நல்லதூக்கத்தில் இருந்தனள். ஆனால், இவ்விளம் பெருமாட்டி நெடுநேரம் அந்தத் தூக்கத்தால் கவரப்பட்டிருந்தவள் அல்லள்; அஃது ஆழ்ந்ததுயில் அன்று; கனவோடுகலந்த உறக்கத்தின் றன்மை யுடையதாய் ருந்தது.கதவு திறக்கப்பட்டமையால் அவள் திடுக்கிடவும் இல்லை; ஒருகால் அவள் ஓசையொன்றும் கேட்கத்தான் இல்லையோ:ஆனால், ஏதோ புதுமையாக வழக்கத்திலில்லாதது நடக்கிற தென்னும் ஓர் உணர்வு மாத்திரம் விரைவாக அவள் உள்ளத்தில் வந்து நுழைவதாயிற்று. உறக்கத்திற்கும் கண்விழிப்புக்கும் நடுவே மனமானது தன்னைச் சூழ நடப்பதைத் தெளிவின்றி மங்கலாய் உணர்வதும், அங்ஙனம் உணரினும் அது மெய்யோ பொய்யோ என்று வரையறுக்கக் கூடாத வகையாய் அவ்வுணர்வு தெளிவின்றி மழுங்கலாய் இருப்பதும்போன்ற நிலையைப் படிப்பவரிற் பெரும்பாலார் தம் அனுபவத்திற் கண்டிருக்கலாம். அந்நிமிஷத்தில் குமுதவல்லியின் மன நிலையும் அவ்வாறாகவே இருந்தது; ஆனால், அவள் வரவர விழிக்கத் துவங்கிச் சிறிதே கண்களைத் திறந்தாள் - மிகவுஞ் சிறுகத் திறந்தமையால் உள்ளே அழகிய கோளங்கள் நம் அகத்தே வரைந்து வைத்த ஒளியில் ஒரு கதிர்மாத்திரமே வெளியே விளங்கியது. ஆகவே, இங்ஙனந்திறந்தது மிகவுஞ் சிறிதாயிருந்த தனால் இது நல்லான் கவனத்தில் தென்படாமற் போயிற்று; ஆனால், அது தன்னருகில் வந்திருக்கும் அச்சம் மிகுந்த

பெரியதோர் இடரின் தன்மையைக் குமுதவல்லிக்குக்

காட்டிவிடப் போதுமானதாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/118&oldid=1581373" இலிருந்து மீள்விக்கப்பட்டது