பக்கம்:மறைமலையம் 13.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

193

நீலநிறமுள்ள துணியினாற் செய்யப்பட்டுக் கழுத்துவரையிற் பொத்தான் மாட்டப்பட்டு அவன் உடம்போடு இறுகப் பொருந்தியிருந்த உட்சட்டையானது அவன் உருவின் மெல்லிய அமைப்பை இனிது புலப்படுத்தியது. இப்போது அவன் தலையின்மேல் ஒன்றுமில்லை; செழுமை பொருந்திய அவன் தலைமயிர்களானவை அகன்ற நெற்றியின்மேல் கொத்து கொத்தாய்ச் செறிந்து சுருண்ட அவன் கன்னப்பொறிகளைச் சிறிதே மூடிக்கொண்டிருந்தன. தன் இடுப்பைச் சுற்றி பூவேலை செய்யப்பட்ட அரைக்கச்சை அணிந்திருந்தான்; மிகவும் அழகிய உறையில் இடப்பட்டிருந்த சிறிய கொடுவாள் ஒன்று இதிலே மாட்டப்பட்டிருந்தது. இவனைப்பற்றி முதலில் விவரித்துச் சொல்லியபோது நாம் எடுத்துக்காட்டிய இவன் கண்களில் உள்ள ஒரு வகையான சுறுசுறுப்பானது, குமுதவல்லியைப் பார்த்த மாத்திரத்திலே உயிர்ப்புடன் திடுக்கிட்டுக் கிளர்ந்த பளபளப்போடு கொழுந்து விட்டெரிந்து, மற்றப்படி ஆண்மை யழகில் முற்றுப்பெற்று ஆவலைத் தரத்தக்கதாய் உள்ள அவனது முகத்தின்மேல் மின்னல் ஒளியின் துளக்கம்போல் மந்தார ஒளி வீசுவதென்னக் காணப்பட்டது.இல்லாவிட்டால் அவனுடைய தோற்றமானது பார்ப்பவர்க்குத் தன்னிடத்தே நிரம்பவும் பற்றுண்டாகும்படி செய்திருக்கும்.

குமுதவல்லி முக்காடு இட்டிருந்தும் அவன் அவளைத் தெரிந்துகொண்டான்;-அவள் வடிவத்தின் மிகவும் நேர்த்தி யான திருந்திய அமைப்பினாலும், அவள் முக்காட்டின் மடிப்புகளின் கீழ் எட்டிப்பார்ப்பது போற் றோன்றிய அவள் கருங் கூந்தலின் ஒரு சுருண்ட கற்றையினாலும் அவன் அவளைக் கண்டு கொண்டான். அவள் கண்கள் அங்ஙனம் சடுதியில் ஒருதீய ஒளியை வீசியது என்ன? அதனால் அவன் ஏதோ ஒரு மனக் கலக்கத்தாற் சடுதியிற் பற்றப்பட்டானென்பதும், அதனை அவன் தன்னுள் அடக்கமாட்டாத வனாயினானென்பதும் புலப்படு கின்றன வல்லவோ? பலகிளை யாக்கிப் பின்னர் அவளைச் சுற்றி வலைபோற் பின்னப்பட்ட இரண்டகமான உபாயங் களுக்குப் பிறகு நாகநாட்டரசி தான் சேரவேண்டிய இடத்தில் வந்து சேர்வளென அவன் எதிர்பார்க்கவில்லையோ? அல்லது எவரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்து,. குதிரைக் குளம் படிகளின் ஓசை தெருவில் நின்றதைக் கேட்டுக் குமுதவல்லிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/222&oldid=1581495" இலிருந்து மீள்விக்கப்பட்டது