பக்கம்:மறைமலையம் 13.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம்

13

ஒருவன் தன்கடமையைச் செவ்வனே செய்து முடித்ததைப் பற்றியும், நம்பிக்கைக்குரிய ஒரு செய்தியைக் கொண்டு போகும்படி அமர்த்தப்பட்டக்கால் தன்னை அங்ஙனம் அமர்த்திய அன்புள்ள தன்தலைவரும், அச்செய்தியைத் தான் நம்பிக்கையோடு கொண்டுபோய்ச்சேர்க்க அதனை ஏற்கும் அரசியாரும் முழுதும் மனம் உவக்கும்படி தான் நடந்து காண்டதைப்பற்றியும் அவன் தான் உறுதியாகத் தெரிந்து கொள்ள விழைவது இயல்பேயன்றோ?

“வழியில் எத்தகைய இடர்கள் எனக்கு நேர்ந்தனவாயினும், முடிவாக அவை என்னுடைய அலுவல்களை பழுதாக்கத்தக்க தொன்றையும் உண்டாக்கவில்லை. ஆதலால், அவற்றால் மனத் திற்கு இசையாத அனைத்தையும் நான் மறந்துவிடுவதற்கு மிகவும் விருப்பம் உள்ளவளாய் இருக்கிறேன். சந்திரா, உன்னைச்சுட்டி யான் சொல்லக்கூடிய குற்றம் ஒன்றும் இல்லை. மேலும், உன் தலைவர் உனது நடக்கையைப்பற்றி மகிழ்ந்திருப்பதை நீ அறிந்தால், அஃது உனக்கு இன்பந் தருவதாயிருத்தலால், சிறிது நேரத்திற்குமுன்னே உன் பெயரைச் சொல்லுகையில் தமக்கு நம்பிக்கையுள்ள ஏவற்காரன் என்று உன்னைக் குறிப்பிட்டு உன்தலைவர் கூறியதை யான் உனக்குச்சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்.” என்று குமுதவல்லி விளம்பினாள்.

66

“அருள் மிக்க அரசி, தாங்கள் கூறிய இவ்வுறுதி மொழிக்காக எனது வணக்கத்தைச் செலுத்துகின்றேன். எனது வாழ்நாளில் யான் நிறைவேற்றக்கருதி யிருப்பது ஒரே ஒருநோக்கந்தான் அஃதென்னென்றால், யான் தாழ்ந்த ஓர் ஆளாய் இருப்பினும், எனது கடமையைச் செவ்வனே செய்து, என்போல் மக்களாய்ப்பிறந்தவர்களின் நல்லெண்ணத்தை யான்

பெற்றுக்கொள்ளுதலேயாம். பெருமாட்டி, மாட்சிமைதங்கிய மனோகரருக்காக எனது உயிரையுங்கொடுக்கச் சித்தமாயிருக் கின்றேன். இனித் தங்கள் பொருட்டும் எப்போதாயினும் யான் ஏதேனுஞ் செய்யும்படி ஏவப்பட்டால், அருள்மிகுந்த அரசி, தங்கள் அலுவல்களிலும் யான் உண்மையோடும் உள்ளக் கிளர்ச்சியோடும் அழுந்தி முயல்வேனென்பதை எடுத்துரைப்ப தற்கு இதனையே ஏற்ற நேரமாகக்கொண்டு தடுக்கமுடியாத மனவெழுச்சியோடுங் கூறும் எனது மனத்துணிவிற்காக அடியேனை மன்னித்தல்வேண்டும்!” என்று சந்திரன் கிளர்ச்சி யோடுங் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/287&oldid=1581606" இலிருந்து மீள்விக்கப்பட்டது