பக்கம்:மறைமலையம் 13.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

277

நாடகப் பண்புகள் பற்றிய தெளிந்த அறிவையும் ஊட்டினார். இத்துடன் தாமே 'அம்பிகாபதி அமராவதி' என்ற நாடகத்தையும் இயற்றியுள்ளார். இதற்குரிய தூண்டுதலைப் பெற்ற ஊற்றுக் கண்கள் வியப்பிற்குரியன.

நாடகத் தூண்டல்

நாடகப் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்கள் அடிகளார்க்குச் சான்றிதழ் நல்கும்போது 'தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக் காலத்தில் இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துவருதல் பாராட்டுக்குரியது' என 2-12-1895இல் குறிப்பிட்டார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவர் தலைமையில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் 12-9-1896 அன்று ‘நாடகத் தமிழ்’ பற்றி விரிவுரையாற்றி மனோன்மணீயம் பாடிய வாயால் பாராட்டுரை பெற்றார் எனில் அடிகளார்க்கு அமைந்த நாடகப் புலமையைப் பாராட்டற்குரியவர் பாராட்டினார் எனலாம். மேலும் 'நாடக இயல்' நல்கிய பரிதிமாற் கலைஞருடன் தமிழ்ப் பணி புரியும் வாய்ப்பைப் பெற்ற அடிகளாரை அவ் வறிஞர் பெருமகன் 'உரைநடை கைவந்த வல்லாளார்' எனப் போற்றினார். இங்ஙனம் நாடக இலக்கண இலக்கியம் படைத்த நல்லறிஞர்களின் கூட்டுறவும் மதிப்பீடும் அடிகளாரைத் தமிழ்நாடகத் துறையிலும் பணிபுரியத் தூண்டின. நாடகத் தலைப்பு

நாடகத் தலைப்பும் தலைவன் தலைவிக்கு ஒத்துரிமை உடையதாக 'அம்பிகாபதி அமராவதி' என அமைந்துள்ளமை கூர்ந்து நோக்குதற்குரியது. அடிகளார்க்கு 'ரோமியோ சூலியட்டு' என்ற ஷேக்ஸ்பியரின் காதல் நாடகத்தின் மீது அளவு கடந்த பற்றுண்டு என்பதைச் 'சாகுந்தல நாடக ஆராய்ச்சி’ வாயிலாக அறிகிறோம். எனவே அறிவில் சிறந்த அம்பிகாபதியும் பெண்மை நலத்தில் சிறந்த அமராவதியும் ஒருங்கே அடிகளார் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளமையால் அவர்கள் பெயரே நூற்பெயராக உருக்கொண்டு வெளி வந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/306&oldid=1581765" இலிருந்து மீள்விக்கப்பட்டது