பக்கம்:மறைமலையம் 14.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

93

சிறிதுநேரம் பேசாமலிருந்தேன். அப்பால் என் மாமனார் களைப் புத்தீர்ந்து என்னை விழித்துப் பார்த்தார்; யானும் என் உணர்வு வரப் பெற்றேனாகி, என் மாமனாருடைய பெருந்தன்மையையும், அருட் குணத்தையும், தாரளமான உள்ளத்தையும், என்னிடத்து வைத்திருக்கும் பேரன்பினையும் நினைந்து நினைந்து இன்னது சொல்வதென்று அறியேனாய் அவருடைய கைகளை எடுத்து என் கண்கள்மேல் ஒற்றிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன். அவர் அதனைக்கண்டு ஆற்றாராய்க் “குழந்தாய், அழவேண்டாம்; அழவேண்டாம்" என்று சொல்லிக்கொண்டே என் கண்களைத் துடைத்தார்.

பிறகு “மாமா, ஒன்றுக்கும் பற்றாத சிறியவளான என்மேல் தேவரீர் இவ்வளவு அன்புவைத்து எளியேனைப் பாதுகாத்த பேர் அருளுக்கு நான் எங்ஙனம் நன்றி செலுத்துவேன்! என்குல தெய்வமே நீங்கள் சுகமாக எழுந்திருந்து சிறியேங்கள் செய்யும் ஊழியங்களை ஏற்றுக்கொண்டு எங்கள் கூடவே உங்கள் வாழ்நாள் அளவும் இருக்கும்படி மனம் இரங்கவேண்டும்” என்று அழுதபடியே கூறினேன்.

66

குழந்தாய், நம்முடைய குலத்தில் நீயும் உன் தமையனுந் தான் என் அன்பிற்கு உரியவர்கள். அதனால், உங்களை நல்ல நிலைமையில் வைப்பது தான் என் மனத்திற்கு இசைந்தது.நீங்கள் இருவரும் என்னிடம் பேரன்பு வைத்திருப்பதொன்றே எனக்குப் போதுமானது. நான் உயிர்பிழைத்திருந்தால் உங்களுடன் இருந்து காலந்தள்ளத் தடை இராது ஆ! அதோ! என் அருமை மகள்! என் கண்மணி இத்தனைநாள் நீ என்னை எங்ஙனம் பிரிந்திருந்தாய்!” என்று என் மாமனார் மேலே ஆகாயத்தைச் சுட்டிக்காட்டிக் கண் இமையாதிருந்தார்.

என்னை நோக்கிப் பேசிவருகையில் இடையே இவர் இங்ஙனம் மேலே சுட்டிக்காட்டிப் பேசியதைக்கேட்டு என் உள்ளம் திடுக்கிட்டது. யான் மேல் நிமிர்ந்து பார்த்தேன். என் கண்ணுக்கு ஒன்றும் புலப்பட்டிலது. என் மாமனாருக்கு ஏதோ உணர்வு பிறழுகிறதென்று எண்ணிக் கலங்கினேன். பின்னர்ச் சிறிது நேரத்திற் கெல்லாம் என் மாமனார் கண் இமை கொட்டியது. உடனே அவர் என்முகமாய்த்திரும்பிப் பின் வருமாறு கூறினார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/122&oldid=1582080" இலிருந்து மீள்விக்கப்பட்டது