பக்கம்:மறைமலையம் 14.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

253

அவ்விடத்திற்குச் செல்லுஞ் சுருக்கமான குறுக்குவழியுந் தெரிந்து வந்திருக்கின்றோம். ஆகையால், எல்லாரும் உடனே புறப்படக் கடவோம்” என்று எங்கள் உயிர் தளிர்க்கக் கூறினார்.

ஆடவ ரெல்லாரும் வேண்டியபொழுது உடனே கையாளத் தக்க வகையாய்த் தாந்தாங் கொண்டுவந்த கைத்துப்பாக்கி கத்தி எறிகோல் முதலியவற்றையெல்லாஞ் செவ்வையாக அணிந்து கொண்டனர். விரைவிற் செல்லும்பொருட்டு எங்கள் ஆட்களில் நால்வர் எங்க ளிருவரையுந் தொட்டிலிற் றூக்கிக் கொண்டார்கள். அவ்வதிகாரி கூறியபடியே இரண்டு மூன்று மணி நேரத்தில் அச் சிறுகுன்றின் அண்டையில் வந்து சேர்ந்தோம்.நிலவொளி பட்டப்பகல்போல் வீசியது. இப்போதும் நிலவொளி எங்கட்குச் செய்த உதவிக்காக இறைவனை மனங் குழைந்து தொழுதோம். உடனே அக் குன்றின் மேலேறி அப்பக்கத்தே யுள்ள பள்ளத்தாக்கை நோக்கினோம். கீழே எட்டுக் குதிரைகளிற் சில நின்றுகொண்டுஞ் சில படுத்துக் கொண்டும்

ருந்தன. அங்கே ஆட்கள் நடமாட்டம் ம் உண்டாவென உன்னித்துப் பார்த்தோம். ஏதோர் அரவமும் இல்லை. அதன்மேல் எல்லாருமாய்க் கீழ் இறங்கி அப்பள்ளத் தாக்கிற் போய்க் கள்வர் சென்ற வழியைத் தேடலானோம். உள்ளே என்மனமும் அம்மையார் மனமுந் துடிதுடித்தன. பேச நாவும் எழவில்லை. மூன்றாள் உயரம் நான்காள் உயரமுள்ள மலைப் பாறைகள் அம் மலையடிவாரத்தில் ஆங்காங்குக் காணப்பட்டன. கீழே எங்கும் மென்புல் அடர்ந்து வளர்ந்திருத்தலால், முற்சென்ற கள்வரின் அடிச்சுவடுகள் தென்படவில்லை. நிலவொளி யிருந்தாலும், இராப்பொழுது ஆதலால், காலடிபட்டு மென்புற்கள் சாய்ந் திருப்பதுங் காணக்கூடவில்லை. ஆகவே, அங்கிருந்த ஒவ்வொரு மலைப் பாறையினையுஞ் சுற்றிச்சுற்றிப்பார்த்தோம். எங்கும்வழி புலப்படவில்லை. கடைசியாக அவ் வதிகாரியின் கூரியகண்கள், ஒரு பாறையின் ஒருபக்கம் நிலத்திற்குமேற் சிறிது வளைவாய் மேற்கவிந்திருத்தலைக் கண்டு கொண்டன. ஒருவர் அதன்கீழ்க் குனிந்துதான் போகலாம். உடனே அவர் அதன் கீழ்க்குனிந்து போய்ப்பார்த்து மீள வெளியேவந்து “இரண்டுபேர் பக்கத்தே பக்கத்தே உள்ளவராய் நின்றபடியே செல்லத்தக்க வழி ஒன்று மலையி னூடே செல்கின்றது!” என்று மகிழ்வோடு கூறினார். உள்ளே சென்றால் குகையினுள் ளிருக்குங் கள்வர்கட்குந் தமக்குங் கடும்போர்நடக்குமாதலால், அவ்விடத்திற்குப் பெண்பாலார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/282&oldid=1582575" இலிருந்து மீள்விக்கப்பட்டது