பக்கம்:மறைமலையம் 15.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

சிவராஜயோகம்

‘யோகம்’ என்பது பொருந்துதல் என்னும் பொருளைத் தரும் ஓர் வடசொல்லாம். பொருந்துதல் என்ற மாத்திரை யினாலே பொருந்துகின்ற பொருளும், பொருந்தப்படும் பொருளும், பின் பொருந்துதற்குக் காரணமும், முன் பொருந்தா திருந்தமைக்குக் காரணமும், ஒன்றை மற்றொன்ற னோடு பொருத்துகின்ற உபகாரசத்தியும், பொருந்தியபின் விளையும் பயனும் ஆகிய இவையெல்லாம் பெறப்படுதல் வேண்டும். ஆகவே பொருந்துகின்ற பொருள் சீவான்மாவும், பொருந்தப் படும் பொருள் பரமான்மாவும், பின்பொருந்து தற்குக் காரணம் பிரமானந்த வேட்கையும், முன்பொருந்தா திருந்தமைக்குக் காரணம் ஆணவமல மறைப்பும், பொருத்து கின்ற பொருள் இறைவனோடு தாதான்மிய சம்பந்தப்பட்டு நிற்கும் அனுக்கிரக சத்தியும், பொருந்திய பின் விளைவது சிவானந்தப் பெருக்கு மாகு மென்பது முடிக்கப்படும். இதனை ஓர் உதாரண முகத்தான் விளக்குமிடத்து, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் சையோகம் நிகழ்ந்தது என்றக்கால் கூடுகின்ற புருஷனும் கூட்டப் படுகின்ற ஸ்திரீயும், அவன் அவளைக் கூடுதற்குக் காரண மாகிய காமவேட்கையும், முன் அவளைக் கூடாதிருந்த மைக்குக் காரணமாகிய அவளை அறியாமையும், அவளை அவனோடுகூட்டுவித்து உபசரிக்கின்ற தோழியும், கூடியபின் அவர் இருவரும் அனுபவிக்கின்ற காமநுகர்ச்சி யின்பமு மாகிய இவையெல்லாம் அச்சையோகம் என்னுஞ் சொல்லாற் பெறப்படும் அன்றே? இதுபோலவே சீவான்மா பரமான் மாவோடு சம்பந்தப்பட்டு ஐக்கியமாய் நிற்கும் நிலை அறியற் பாலதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/128&oldid=1583182" இலிருந்து மீள்விக்கப்பட்டது