36
❖ - 15 மறைமலையம் - 15
L
வேண்டா கூறலேயாம். உலகத்தின்கண் விரிந்து கிடக்கும் எல்லா நூல்களும் வேண்டா கூறுதலாகிய இக்குற்றம் பொருந்தப் பெற்றன வேயல்லாமல் பிறிதில்லை; மற்றுத் திருக்குறளும் சிவஞான போதமும் எனும் இரண்டு மோ அக்குற்றம் சிறிதும் இல்லாதனவாம்.
அற்றேல், நாலடியார், சிலப்பதிகாரம் போன்ற வேறு உயர்ந்த நூல்களெல்லாம் பயன்படாவா யொழியுமோ வெனின்; - ஒழியா; உலகத்திலுள்ள நூல்களெல்லாம் இயற்கை நெறி, செயற்கை நெறி என்னும் இரு பகுதிகளிலே அடங்கும். 'இயற்கை நெறி' என்பது தான் கருதிய உண்மைப் பொருளை உள்ளவாறே சொல்லுதற்கு இன்றியமையாது வேண்டப்படுஞ் சொற்களால் நடை பெறுவது; 'செயற்கை நெறி' என்பது தான் கருதியதோர் உண்மைப்பொருளை உணர்த்துகின்றவர் கேட்போர் அறிவு அதிற் பற்றுந் திறத்தால் அவர்க்கு இசைய அப்பொருளோடு இணங்கிய வேறு சிலவற்றையுஞ் சேர்த்துப் பலசொல்லால் விரித்துக்கூற வருவது. 'இயற்கை நெறி' பற்றி எழுதப்படும் நூல்கள் நுண்ணறிவுடைய அதிதீவிர பக்குவ முடையார் பொருட்டும், ‘செயற்கை நெறி' பற்றி எழுதப்படும் நூல்கள் மழுங்கிய அறிவுடைய மந்த பக்குவமுடையார் பொருட்டும் எழுந்தன வாகும். இனி உலகத்தில் மந்த பக்குவ
முடையார் பலரும், அதிதீவிர பக்குவமுடையார்
சிலருமாகலான் அவரவர் பொருட்டு எழுந்த செயற்கைநெறி நூல்கள் பலவும், இயற்கை நெறி நூல்கள் சிலவுமாயின. கசக்கும் மருந்துண்ணாத மகவுக்கு அதனை ஊட்டலுறுவாள் அது தன்னைப் பனைவட்டுத் துண்டிற் பொதிந்து ஊட்டியவழி அம்மகவு இன்சுவைத்தாகிய அதனை உண்டு நோய் தீர்ந்தவாறு போலவும், அறியாதான் ஒருவன் சேறு குழம்பிய தண்ணீரை உண்ணப்போதலைக் கண்டு இரங்கிய அறிவுடை யான் தூரத்திற் றோன்றும் பேய்த்தேரைக் காட்டி ‘அந்த நல்ல நீரைப் பருகு' என்று வஞ்சித்துக் கொண்டுபோய் ஒரு தடாகத்தில் நீர் ஊட்ட அவணுண்டு நீர் வேட்கை ஒழிந்த வாறு போலவும், உண்மை நுண்பொருளை உள்ளவாறே உணர்த்தினால் அறியமாட்டாத மந்த மதியுடையார்க்கு அதில் அறிவு செல்லும்