பக்கம்:மறைமலையம் 16.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

137

ராயின் அங்ஙனம் பிழைபட உரையார். மனையாளைப் புணர்ந்து நுகரும் இன்பங் காமத்தின்பாற்படும். அவளைப் புணராத காலங்களில் அவடன் அருங்குணங்களொடு பழகுதலானும், அவடன் அறிவுச் செயல்களைக் காண்ட லானும், அவடன் அறிவு மொழிகளைக் கேட்டலானும், எல்லா வகையினும் அவள் தன்னோடு ஒத்து ஒழுகுதலை வியத்தலானும். அவடன் எழில் நலங்களை நோக்குதலானுங் கணவற்கு ஓவாது விளையுமின்பங் காதலின்பத்தின்பாற் படும். இங்ஙனமே தன் காழுநன்றன் அருமைப்பாடுகளை த உணருந் தொறும் நினையுந்தொறும் மனைவிக்குங் கழிபெருங் காதலின்பம் ஓவாது விளையாநிற்கும். இவ்வாறு காதலின்ப நிகழ்ச்சி அவர் தமக்குள் உண்டாயினாலன்றி அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் யலாது; அன்புடையராய்

ஒருமித்துநின்று,

ஒழுகினாலன்றி

“அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலுங் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்”

அவர்

(சிலப்பதிகாரம்)

ஆகிய இல்லறத்தை இனிது நடாத்துதலும் ஒரு சிறிதும் இயலாது. ஆகவே, இன்பத்தின் வழித்தாகவே அல்லது இன்பத்தை நுதலியே இல்லறம் நடைபெறுதல் ஐயுறவின்றித் தெளியப்படும். இவ்வியல்பினை, ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரே காதலின்பத்தின் விளைவான அன்பை முன் வைத்து அறத்தைப் பின் வைத்து,

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’

(குறள்-45)

என்று கூறி நன்கு விளக்கியருளினார். அவர் கருத்தறிந்த உரைகாரர் பரிமேலழகியாரும் 'இல்லாட்குங் கணவற்கும் நெஞ் சொன்றாகாவழி இல்லறங் கடைபோகமையின், அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று.' என்று உரை கூறியதூஉம் உற்றுநோக்கற்பாலதாம். இவ்வியல் பெல்லாம் நூல் வழக்கானேயன்றி உலகியல் வழக்கானும் எளிதில் உணரக்கிடப்பவும், இவை தாமும் உணரமாட்டாது, அறமே முதற்கண் வைக்கப்பட்டதென அம்மறுப்புரை காரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/162&oldid=1583740" இலிருந்து மீள்விக்கப்பட்டது