பக்கம்:மறைமலையம் 17.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

167

அங்ஙனம் அவர் வேண்டி வரும்பொழுது, திருஞான சம்பந்தப் பிள்ளையார் என்னும் ஒரு சிறு மதலை, இறைவனும் இறைவியுமாய்த் தோன்றிக் கடவுள் தந்த ஞானப்பாலை உண்டு. மூன்றாம் ஆண்டிலேயே எல்லாம் உணர்ந்த ஞானாசிரியராய்ச், சிவபெருமான்மீது செந்தமிழ்த் திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு திருமுறைக்காட்டுக்கு (வேதாரணியத்திற்கு) வந்திருக்கிறார் என்பதைக் கேள்வியுற்றார். இதனைக் கேட்டளவிலே அவ் அரசியார் அடங்காப் பெருமகிழ்ச்சி அடைந்து, தம்மைப் போலவே சிவபெருமானிடத்து நீங்கா அன்புடையராய் விளங்கிய தம் அமைச்சரான குலச்சிறை என்பவரை அழைப்பித்து, அவர்க்குத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் தந்தெய்வத் தன்மைகளை விரித்துரைத்து, அவரை மதுரைமா நகருக்கு வருவிக்கும்படி கட்டளையிட்டார். உடனே குலச் சிறையாருந் திருஞானசம்பந்தப் பெருமானுக்குத் திருமுகம் எழுதிவிடுத்து மதுரைமாநகருக்கு எழுந்தருளும்படி நிரம்பவும் வேண்ட, அதற்கிசைந்து பெருமானும் மதுரைக்கு வந்து அங்குள்ள சிவபிரான் திருக்கோயிலின்கண்ணே மங்கையர்க்கரசியாரைக் கண்டு அப்பெண்ணரசியின் அருங்குணச் செயல்களை மிகவும் பாராட்டி,

"மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரி வளைக்கை மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே”

என்று தமது மலர்வாய் திறந்து பாடியருளினார்.

இங்ஙனந் திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவாயாற் புகழ்ந்து பாடப்பெற்ற மங்கையர்க்கரசியாரின் ஒப்பற்ற சிறப்பினையே சேக்கிழார் அடிகள் தாம் அருளிச்செய்த பெரிய புராணத்தின் கண்ணே மேற்காட்டிய செய்யுளிற் பெரிதும் வியந்து பேசியிருக்கின்றார். இவ்வளவு உயர்குணச் சிறப்பு வாய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/192&oldid=1584431" இலிருந்து மீள்விக்கப்பட்டது