பக்கம்:மறைமலையம் 17.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் 17

தாயானவள் சூல்கொண்டவளாயிருக்கும்போது நினைத்த நினைவுகளும், எண்ணிய எண்ணங்களும், அவள் வயிற்றிலுள்ள பிள்ளையின் மூளையிற் பதிந்து அதனை உருவாக்குகின்றன என்று இக்காலத்தில் மனநூல் வல்ல அறிஞர்கள் ஆராய்ந்து காட்டுகின்றார்கள். நமது நாட்டிற் பழைய கதையான பாரதத்தினாலும் இவ்வுண்மை நன்கு புலனாகின்றது.

கண்ணபிரான் கருக்கொண்டிருந்த தன் தங்கைக்குப் பழைய நாளில் இருந்த போர் மறவர்களின் அரிய ஆண்மைச் செயல்களை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தாரென்றும், அவற்றைக் கேட்டு வந்த சுபத்திரை அவைகளை மிகவும் வியந்து தன் கருத்தை அவ்வாண்மைச் செயல்களிற் பதிய வைத்தமை யால் அவள் வயிற்றகத்துள்ள கருவில் அந்நினைவேறி நன்றாய்ப் பதியலாயிற்றென்றும், பிறகு அது பிள்ளையாய்ப் பிறந்து அபிமன்னியு என்னும் பெயர் பெற்று அஞ்சா நெஞ்சுள்ள ஆண்மையாளனாய்க் கண்டாரெல்லாம் வாய்மேற் கைவைத்து வியக்கும்படி அருந்திறல் ஆண்மையொடு பெரும் போரியற்றிப் புகழ்பெற்று நிகரற்ற ஆண்மகனாய் விளங்கினதென்றும் அப்பாரதக் கதையில் நாம் படித்திருக்கின்றனமல்லமோ?

மேல் நாட்டில் நிகரற்ற போர்மறவனாய் விளங்கிய நெப்போலியன் என்னும் மன்னர் மன்னனைப் பற்றி நம்மவர்க்கு நன்றாய்த் தெரிந்திருக்கலாம். அவன் முதலில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்திற் பிறந்து, பிறகு ஒரு படையிற் சிறிய சம்பளத்திற்குப் போர் மறவனாய் அமர்ந்து, பின்பு நாட்செல்லச் செல்லத் தனது அஞ்சா ஆண்மையினாலும் நுண்ணறி வினாலும் மேன்மேல் உயர்ந்து, சில ஆண்டுகளில் ஒரு படைக்குத் தலைவனாய் ஏற்படுத்தப்பட்டான். அதன் பின்பு அவன் அரசர் பலர் மேல் எதிர்த்துச் சென்று, அவரையெல்லாம் பெரும் போரில் தோல்வியடையச் செய்து, கடைசியாக இணையற்ற போர் மறவன் என்னும் பெயர் ஐரோப்பா கண்டம் முழுதும் விளங்க, அரசர்க்கு அரசனாய் புகழ்பெற்று நிலவினான். முதலில் ஏழைமையான நிலையிலிருந்த இம்மன்னவன் இத்தனை உயர்ந்த நிலைமைக்கு வரலானது எதனால் என்று அறிவுடையோர் சிலர் ஆராய்ந்து பார்க்க, அவனை ஈன்ற அன்னையே அவன் அங்ஙனம் உயர்ந்த நிலைமையடைதற்குக் காரணமாயினாள் என்பது து புலப்படலாயிற்று.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/203&oldid=1584449" இலிருந்து மீள்விக்கப்பட்டது