பக்கம்:மறைமலையம் 18.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

இளைஞர்க்கான இன்றமிழ்

217

இரங்கிய மற்றொருவன் அவனுக்குச் சோறுங் கூறையுங் கொடுக்குங்கால், வறுமை இன்னதென்றும் அதனைத் தீர்க்கும் ஈகை இன்னதென்றும் நாம் உணரப்பெறுதலால், அதுமுதற் கொண்டே பின்னர் வறுமை ஈகையைப்பற்றிய எண்ணங்கள் நம் நினைவில் எழப்பெறுகின்றோம். இனி, வறுமைப்பட்டு வருந்தும் ஒருவனுக்கு அங்ஙனம் ஈதலைச்செய்யாமல், அவனை அடித்து வெருட்டும் மற்றொருவனுடைய செயல்களைக் காணும்போது, வறுமையால் உண்டாந் துன்பங்களும்; மன இரக்கம் இல்லா ஈயாச்செயலின் கொடுமையும் நாம் நன்கு உணர்தலாற், பின்னர் அவற்றைப் பற்றிய எண்ணங்கள் நம் நினைவில் உருத்து எழுகின்றன. இங்ஙனமே இன்னும் பலதிறப்பட்ட நன்மை தீமைகளைப் பற்றிய எண்ணங்கள் பலவும் நம் உளத்துத் தோன்றுதற்கு, அவையிரண்டுக்கும் முதலான செயல்கள் மாந்தர்கள்பாற் காணப்படுதலே காரணமாயிருக்கின்றது. இதற்கொரு சிறு கதையினை இங்கு எடுத்துக் காட்டுவாம்.

ஓர் அரசன் தான் ஈன்ற ஒரு சிறுவனை ஓர் ஆசிரியன் பால் விடுத்து அவனுக்குக் கலைகள் பலவுங் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்தனன். அவ்வாசிரியன் அவ்வரசன் மகனை அன்புடன் ஏற்றுவைத்து, இனிய முகத்துடனும் இனிய சொற் செயல் களுட னும் அவனது அரச வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படுங் கலைகளையும் பிற கலைகளையும் அவனுக்கு நன்கு புகட்டி வந்தனன். அவன் அக்கலைகளை யெல்லாந் திறமாகக் கற்றுத் தேறியபின், ஆசிரியன் அவனை அழைத்துக் கொண்டுபோய், அரசன் தன் அமைச்சர் முதலாயினார் புடைசூழ வீற்றிருக்கும்போது, அவன் முன்னே நிறுத்தி, "மன்னர்பிரான், தங்கள் அருமைப் புதல்வனை அவனுக்கு வேண்டிய எல்லாக் கலைகளிலும் நன்கு பயிற்றி இதோ தங்கள் முன்னிலையிற் கொணர்ந்திருக்கின்றேன். அவனது கலையறி வினைத் தாங்கள் செவ்வனே ஆராய்ந்து காணலாம்” என்று தெரிவித்துக்கொண்டனன். அதுகேட்ட அரசன் மிகமகிழ்ந்து, தன் அவைக் களத்தில் வந்திருந்த கலைவல்ல புலவர் சிலரை நோக்கிக், “கல்வியிற் சிறந்த சான்றோர்களே, என் புதல்வனுக் குள்ள கலைப்பயிற்சியினை ஆராய்ந்து காண்மின்கள்!” எனக் கட்டளையிட்டனன். அங்ஙனமே, அப்புலவர்கள் ஒருவர்பின்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/249&oldid=1585386" இலிருந்து மீள்விக்கப்பட்டது