பக்கம்:மறைமலையம் 20.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

229

பொன்னுருவுடன் விளங்குகின்ற காட்சியானது, எரியிடை - எரியும் நெருப்பின்கண், உருகிய பசுபொன் கவிழ்ப்ப - நீராய் உருகிய பசும்பொற் குழம்பைக் கீழ்முகமாகக் கவிழ்த்திடுதலும், ஓடிய திருவொடும் பொலியும் செவ்வியும் - அஃது ஒழுகிய அழகோடு ஒப்ப விளங்கும் அழகும்;

'பொறிப்ப', இங்குச் சிந்திய வென்னும் பொருட்டு; இதற்குத் 'தெறிப்ப' வெனச் சிந்தாமணி (46) உரையில் உரைகாரர் நச்சினார்க்கினியர் எழுதுவர்.

66

'துன்னிய வென்பது 'நிறைந்த'வெனப் பொருடரல், 'துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம்” என்னும் நாலடியாரிற் காண்க. (167).

‘எரி’ செந்தாமரை மலருக்கும், 'பசும்பொன்' புன்னைநுண் தாதுக்கும் உவமையாகும்.

செவ்வி - அழகு (சூடாமணிநிகண்டு, 11).

பசும்பொன்னைப் போலவே புன்னைத்தாதும் மஞ்சள்நிற முடையதாதல் காண்க.

திருவொடும், ஓடு ஒப்புமைக்கண் வந்தது.

-

(113-115) மருவிய - பொருந்திய; நெய்தல் அம் கானல் ஐது ஐ உறக்கிடந்த ஒற்றிமாநகரில் - கடற்கரைக்கண் உள்ள கழியடுத்த சோலை அழகுமிகக் கிடந்து திருவொற்றிமா நகரின்கண்.

கானல் - கழிக்கரைச்சோலை (பிங்கலந்தை).

‘ஐது’, அழகு; “பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐதென' என்பது மணிமேகலை (10,2). ஒருசார் பேரொலி நிகழ்த்த, ஒருசார் (102) தாளாண்மாக்கள் தலைப்படும் உஞற்றும் (108) திருவொடும் பொலியுஞ் செவ்வியும் (113) மருவிய நெய்தலங் கானல் கிடந்த திருவொற்றி மாநகரெனக் கொள்க. 'நிகழ்த்த, உஞற்றும் செவ்வியும் மருவிய, கானல் கிடந்த திருவொற்றி மாநகர்' என வினைமுடிக்கப்படும்.

திருவொற்றியூர் நெய்தலும் மருதமும் மயங்கியதாகலின், இங்குத் திணை மயக்கங் கூறப்பட்டது. இது முதற்செய்யுளிலும் எடுத்துக் காட்டப்பட்டமை நினைவுகூர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/254&oldid=1586998" இலிருந்து மீள்விக்கப்பட்டது