பக்கம்:மறைமலையம் 22.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

291

கட்டினன்; கடைசியாகச், சொல்லளவில் அடங்கா அழகுடைய ளாய் இருந்த தன் மனைவியைப் பார்த்துப் பெரிதும் விரும்பத்தக்க இவள் சிவபிரானுக்கே உரிமையாகத்தக்காள்’ என நினைந்து, அவ்வம்மையை அங்ஙனமே அன்போடும் சிவபிரானுக்கே அளித்துவிட்டனன் என்று இப் பாண்டி யனுடைய பேரன் பின்றிறங்களை, நம்பியாண்டார் நம்பிக்கு முன்னிருந்த பட்டினத்தடிகள் தாம் அருளிச்செய்த திருவிடை மருதூர் ‘மும்மணிக்கோவை'யில் விரித்துரைத்தாற்போலவே, நம்பியார் திருவிளையாடலுங் கூறுகின்றது.

இருந்தவாற்றால், இப் பாண்டிய மன்னன் செயலெல்லாம், கிறுக்குப்பிடித்தவர் செயல்களை யொப்பனவாய் உலகத் தார்க்குக் காணப்படுகின்றன. இவ்வியல்பினனான இம் மன்னன் அரசாளுதற்கும் இசைந்தவன் அல்லன்; ஏனை அரசரோடு போர்புரிதற்கும் முன்நிற்பவன் அல்லன். இவன் அரசாளுதற்கு இசையாதவன் என்பது இவனைப் பற்றிய இரண்டு நிகழ்ச்சி களால் நன்கு தெளியப்படும் ஒன்று: காடுகளிலுள்ள மறவிலங்குகள் மிகப் பெருகிப் பயிர்களை அழிப்ப, உழவர் L முறையீட்டிற்காக ஒரு கால் வேட்டம் ஆடக் காட்டிற்குச்சென்ற இம் மன்னன் பகலெல்லாம் காடுகளில் உலாவி இரவிற் றிரும்புங்கால், வழியிடையே கிடந்த ஒரு பார்ப்பனன், தான் அறியாமலே தன் குதிரைக் குளப்படிகளால் மிதிபட்டு இறந்ததனை அடுத்தநாள் விடியற்காலையிற் கேட்டு, அத் தீவினை நீங்க மறையோர் ஓதிய கழுவாய் பலவுஞ் சிறக்கச் செய்தும், தான் மன அமைதிபெறானாய், அத் தீவினை ஓர் உருவு கொண்டு தன் பக்கல்நின்று தன்னை வருத்துவதாகவே நம்பி நீளத் துன்புற்று வந்தனன் என்பது. மற்றொன்று: இப் பாண்டியன் அரசாள்வதிற் கருத்தில்லாதவனாய்த் தன் படைகளையுந் திறம்பட வைத்திலனென்பது தெரிந்து இவனது அரசினைக் கைப்பற்றுதற்குச் சோழமன்னன் ஒருவன் இவன்மேற் படையெடுத்து மதுரையை அணுகத், தான் அவனோடு போர் இயற்ற இசையாமையால் திருவாலவாய்ப் பெருமானிடஞ் சென்று தன்குறையை யறிவிப்ப இறைவன் இவன் பேரன்பிற்குகந்து ‘தூங்கியிராது அச்சோழனை எதிர்த்து ஓட்டுக!' என்று ஏவியபின், இவன் கடவுட்டுணை கொண்டு அவனொடு பொருது அவனைத் துரத்தினன் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/324&oldid=1587881" இலிருந்து மீள்விக்கப்பட்டது