பக்கம்:மறைமலையம் 24.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் 24

குறியீடுகளையிட்டு வழங்குவாராயினர். தமிழ்வேளாண் மக்கட்குப் பிறந்த பிள்ளைகள் 'சுப்பிரமணியன்’, 'விநாயகன்’, 'வீரபத்திரன்', 'சங்கரநாராயணன்' முதலான வடசொற் பெயர்களைப் புனைந்து கொண்ட அளவானே, வடநாட்டுக் குரிய ஆரியப்பிள்ளைகளாய்விடாமை போலத், தனித் தமிழர்தம் ஆராய்ச்சி நுண்ணுணர்விற் பிறந்த 'சிவஞான போதம்' முதலிய அருந்தமிழ் நூல்கட்கு வடசொற்பெயர் புனைந்து விட்டமை பற்றி அவை ஆரியர்க்குரிய ஆரிய நூல்களாய் விடுதல் ஒருவாற்றானுமில்லை. இவ்வாறே தமிழ்நாட்டு ஊர்களாகிய தில்லை,அண்ணாமலை, ஐயாறு முதலியன சிதம்பரம், அருணாசலம், பஞ்சநதம் முதலான வடமொழிப் பெயர்களைப் புனைந்தமட்டானே அவை வடவர்க்குரிய ‘ஆரியப் பிரதேசங்க’ளாய் விடுதலும் எஞ்ஞான்றுமில்லை. இவ்வியல்புகளை ஆய்ந்து கண்டுணர மாட்டாதார், இவ் வடசொற் பெயர்களுங் குறியீடுகளும் உடைமைபற்றி மேற்கூறிய உண்மைத் தமிழ்நூல்களை வடநூன் மொழி பெயர்ப்புகள் போலுமென மயங்குவாரும், அவை அவற்றின் மொழிபெயர்ப்புகளேயா மெனப் பிடித்துப் பேசுவாருமாய்ப் பெரிதும் பிழைபடாநிற்பர்.

இஞ்ஞான்றை ஆங்கில வழக்குப் பற்றி, ஆங்கிலம் அறியாத் தமிழ்மாதர்களுந் தாம் வழங்கும் பண்டங்களுக்குத் தப்புந் தவறுமாய் ஆங்கிலச் சொற்களை யிட்டுப் பேசுதலும், ஆங்கிலமுணர்ந்த தமிழாடவர் இடை யிடையே ஆங்கிலச் சொற்கலந்த தமிழில் உரையாடுதலும் ஆகிய ‘அயல்மொழி மயக்கின்’ இயல்பினை உற்றுக்காண வல்லார்க்குப், பண்டைத் தமிழ்ச்சான்றோருந், தமக்குப் புறம்பான ஆரியமொழிச் சொற்களைத் தாங்கண்டறிந்த கோள்கள் நாள்கள் முதலியவற்றிற்கும் பிறவற்றிற்கும் பெயர்களாய் அமைக்கும் வேட்கையுடையரானதன் உண்மை புலனாகா நிற்கும். வடநாட்டவரால் அறியப்படாமல் தமிழ்நாட்டவராற் கண்டுணரப்பட்ட கோள்கள் நாள்கள் ஓரைகட்குத் தமிழ்ச் சான்றோரோ வடமொழிப் பெயர்களைப் புனைந்து விட்டாராகலின், வாணிகஞ் செய்தற்பொருட்டும் பொறிகள் அமைக்கும் பொருட்டும் அரசர்க்கு மெய்காப் பாளராயும் ஏவற்சிலதர் சிலதியராயும் அமர்தற்பொருட்டுந் தமிழ்நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/157&oldid=1590781" இலிருந்து மீள்விக்கப்பட்டது