பக்கம்:மறைமலையம் 25.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

140 எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக் கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை

இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்

145 பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.

149

எழில்பெறும் இமயத்து இயல்பு உடை - எழுச்சி பெறும் இமயமலையின் தன்மையினை உடைய, அம்பொன் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் - அழகிய பொன் வேய்ந்து விளங்கும் தில்லையம்பலத்திலே, நடம் நவில் - திருக்கூத்தைப் பயிலும், கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை இறைவன் - கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயினையுடைய உமைப்பிராட்டியாருக்கும் மாகாளி யம்மைக்கும் அருள்செய்த அழகிய முகத்திடத்த தான அழகு மிக்க முறுவலிப்பினையுடைய சிவபெருமான், ஒலிதரு கைலை உயர் கிழவோன் - தேவர்கள் வழுத்தும் பாட்டின் ஒலி அறாத கைலை மலைக்குச் சிறந்த உரிமை யுடையவன், ஈண்டிய அடியவரோடும் - திரண்ட அடியாருடன், பொலிதரு புலியூர்ப் புக்கு இனிது அருளினன் - விளங்கா நின்ற தில்லைக்கண்ணே புகுந்து இனிதாக அமர்ந்தருளினன் என்றவாறு.

-

இமயமலைக் குவடு பொன்னிறமாய் விளங்குவதாகலின் அதனைப் பொற்கூரை வேய்ந்த அம்பலத்திற்கு உவமையாகக் கூறினார். உலகத்தின்கண் உள்ள எல்லா மலைக்குவடுகளினும் இமயக் குவடே உயர்ந்ததாகலின் அதன்மேற் படும் ஞாயிற்றின் ஒளி அதனைப் பொன்னிறமாய் விளங்கச் செய்வதாகும் என்பது. இதுபற்றியே புறநானூற்றினும் “பொற்கோட் டிமயம்" (புறநானூறு 2) "பொன் படு நெடுங்கோட்டிமயம்”*(புறநானூறு 39) “பொன்னுடை நெடுங் கோட் டிமயம்”*(புறநானூறு 369) என்றற் றொடக்கத்துச் சொற்றொடர்கள் காணப்படு வாயின. இனித் தில்லைக்கண் அம்பலம் இமயத்தின் கண் உள்ள கைலையும் பொருப்புப் போறலின் அதுபற்றி ‘இமயத்து இயல்பு உடைய' என்றா ரெனலுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/182&oldid=1589413" இலிருந்து மீள்விக்கப்பட்டது