பக்கம்:மறைமலையம் 25.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் 25

அற்றாயின், முன்னே “குவளைக் கண்ணி கூறன் காண்க, அவளுந் தானும் உடனே காண்க” எனவும், பின்னே “தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும், பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ், சூலமுந் தொக்கவளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி” எனவும் போந்த திருமொழிகளெல்லாம் முழுமுதற் கடவுளை ஆண்பெண்ணுருவில் வைத்துக் கூறியவாறென்னை யெனின்; இத்திருமொழிகளுள் எடுத்து உரைக்கப்பட்ட ஆண் பெண் உருவு முதல்வன் மெய்யன்பர்க்கு அருள் செய்தற் பொருட்டுத் தானே காட்டிய தனக்கு என்றும் உண்மையாய் உரிய அருட்டிருவுருவேயாம். ஏனைச் சமயத்தார் கூறும் ஆண் பெண் வடிவுகள் இறைவன் தானே காட்டியன அல்லவாய் அவர் தாந்தாம் வல்லவாறு கற்பித்துக் கொண்ட கூறுவனவாம்; இவை அவ்விரண்டற்கும் உள்ள வேற்றுமை என்க. பின்னர்க் காட்டிய திருமொழியில் 'தொன்மைக் கோலம்' என்றதூஉம் அஃது இறைவற்கு என்றுமுள்ள பழையவுருவாம் என்பதனை

வலியுறுத்துதல் காண்க.

ம்

இனி, ஐம்புல அவாக்களையுந் தொலைத்து வரையேறி அருந்தவம் உழந்த உழந்த முனிவரர் அறிவுக்கும் இறைவன் எட்டாதவன் என்பது ‘சேண்வயின், ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும் போய்த், துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை, அருந்தவர் காட்சியுட் டிருந்த வொளித்தும்' என்பதனால் உணர்த்தப்பட்டது. அற்றேல், இதனை ஒருகால் உணர்த்தினால் அமையாதோ, முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும் என்பதனாலும் ‘ஒற்றுமை கொண்டு நோக்குமுள்ளத், துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்' என்பதனாலும் முன்னேயும் இருகால் தவ முயற்சியுடையாரை எடுத்துக் கூறுதல் வேண்டு மோவெனிற் கூறுதும்.

அகத்தே உள்ளத்தை ஒருவழி நிறுத்து மளவில் முயலுந் தவமும் அதனோடு புறத்தே உடம்பையும் வாட்டி முயலுந் தவமும், அகம் புறமென இருதிறத்தானும்நுகரற் பாலனவாகிய சிற்றின்பங்களைத் துவரத் துறந்து அறிவைத் துலக்குந் தவமுமெனத் தவமுயற்சிதான் முத்திறப்படுதலின் அம் மூன்றனையும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கூறுவான் றொடங்கி முறையுளி யொற்றி முயன்றவர்' என்பதனால் அகமுயற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/291&oldid=1589533" இலிருந்து மீள்விக்கப்பட்டது