பக்கம்:மறைமலையம் 29.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

95

குருக்கண் மார்கள் உண்மையிற் சைவவேளாள மரபினைச் சேர்ந்தவர் களாயிருந்தும், தம்மை அம்மரபிற் குரியவர்களாகச் சொல்லிக் கொள்வது இழிவென நினைந்து, வடக்கிருந்துவந்து குடியேறிய ஆரியப்பார்ப்பன இனத்தில் தம்மையும் மெல்ல மல்லச் சேர்த்துக்கொள்வான் விழைந்து, தம்மவரான சைவவேளாளரைச் சூத்திரரெனவுந் தம்மைப் பிராமணர்

6

எனவும் வேறுபகுத்து, அங்ஙனம் பகுப்பினுந் தமது பிழைப்புக்குப் பலவகையில் உதவியாளராய் நிற்கும் சைவவேளாளரை ஆரியப்பார்ப்பனர் செய்தவாறுபோல் தாமும் முழுச் சூத்திரவகுப்பிற் சேர்த்துவிடுதற்கு இயலாமல், அவர்களைச் சிறிது உயர்த்திச் 'சற்சூத்திரர்' என்னும் ஒரு புதுப்பெயரைப்படைத்து அதனைத் தாம் சிவாகமப் பெயரால் இயற்றிய அந்நூல்களில் எழுதிவைப்பாராயினர். 'சற்சூத்திரர்’ என்னும் இப் பெயர்வழக்கு, எல்லாரும் ஒப்புக் கொண்ட பழைய வடநூல்களில் எங்குங் காணப்படாமையின் இதனை

ஆரியப்பார்ப்பனர் எவரும் தழுவிக் கூறுகின்றிலர்;

இன்னோரன்ன புதுவழக்குகள் விரவிக் காணப்படும் இவ்வாகம நூல்களைப்பற்றிய குறிப்பும் பழைய வட நூல்களில் எங்குங் காணப்படாமையின், வடநூல் ஆராய்ச்சியுடையார் எவரும் இவ்வாகம நூல்களை எங்கும் மேற்கோளாகவும் எடுத்துக் காட்டுகின்றிலர். அற்றேல், வேதாந்த சூத்திரத்திற்குச் சைவ பாடியம் எழுதிய நீலகண்ட சிவாசாரியார் 'யாம் வேத சிவாகமங்களுக்கு வேற்றுமை காண்கின்றிலம்" எனத் தமதுரையுள் உரைத்த தென்னை யெனின்; அவராற் குறிப்பிடப்பட்ட சிவாகமங்கள் என்பன வடமொழியிலுள்ள உபநிடதங்களைப்போற் கடவுள் உயிர் மலம் (பதிபசுபாசம்) என்னும் முத்திறப் பொருளியல்புகள் தெரித்து வீடுபேறு பயக்கும் உணர்வினைத் தோற்றுவிக்கும் வடமொழி தென்மொழி அறிவுநூல்களேயாம். தமிழ் மொழிக்கண் உள்ள திருமந்திரம் அப் பெற்றித்தான தொரு விழுமிய சிவாகம நூலாகும். இத் திருமந்திரம்போன்ற சிவாகம நூல்கள் பல தமிழிலும் வடமொழியிலும் அக் காலத்திருந்தமையின் அவை தம்மையே நீலகண்ட சிவாசாரியார் தமது பாடியவுரையிற் குறிப்பாராயினரென்க. பண்டைநாளிலிருந்த தமிழ் வடமொழிச் சிவாகம நூல்களைப்பற்றிய ஆராய்ச்சியினை எமது மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலுள் விரித்துக்காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/120&oldid=1591785" இலிருந்து மீள்விக்கப்பட்டது