பக்கம்:மறைமலையம் 29.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

143

அறிவிக்கும் பொருட்டே சிவபெருமான் அங்ஙனஞ் செய்தனரென் றுணர்க.

மேன்மையை

அல்லதூஉம், சிவத்தொண்டின் அறிவித்தற்கும், சிவ நேயம் உண்டானாற் புலையுடம்பும் புனிதவுடம்பாம் என்பதனை உலகத்திலுள்ள எல்லார்க்குந் தெளிவித்தற்குமே சிவபெருமான் நந்தனாரை நெருப்பில் முழுகுவித்து எழச்செய்தார் என்க. அவ்வாறானால், ஊன் உண்ணும் மற்றைச் சாதியாரும் ஊனைவிட்டுச் சிவநேயத்தில் மேம்படுவராயின் அவரைச் சைவர்கள் ஏற்றுக் கொள்ளுமுன், சிவபெருமான் அவர் பெருமையை அங்ஙனமே ஓர் அருஞ்செயலால் அறிவித்தல்வேண்டு மெனின்; சிவநேயத்திற் சிறந்த அடியார்க்குப் புலையுடம்பும் புனிதவுடம்பாம் என்பதனை ஒருகாலத்து ஓரிடத்து ஓர் அரிய நிகழ்ச்சியால் தெளியச்செய்தால், அதனைப் பிற்காலத்து வருவோர் ஏற்றுப் பின்னர் அடியார் பணிசெய்து நடத்தல்வேண்டுமே யல்லாமல் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமைசெய்து காட்டினால்தான் இவரை அடியார் என்று ஏற்போம் என்றல் அறிவில்லா விழலர் கூற்றாய் முடியும்; திருஞானசம்பந்தப் பெருமான் சைவ சமயமே மெய்ச்சமயம் என்பதனை வெப்புநோய் நீக்கியும் அனலில் ஏடெழுதி யிட்டும் புனலில் ஏடெழுதிவிட்டும் பற்பல செயற்கரிய செய்கைகளால் இனிது விளக்கி யருளினார்; அதுபோலவே, இப்போது சைவசமயமே மெய்ச்சமயம் என்று நாட்ட வருகிறவர்களும் அங்ஙனமே செயற்கரியது செய்து காட்டினால்தான் அதனை ஏற்றுக்கொள்வோம் என்று கூறுவாருண்டோ? இல்லையே. அங்ஙனமே, சிவநேயம் உடையார்க்குப் புலையுடம்பும் புனிதவுடம்பாமென்பதை நந்தனாரைக்கொண்டு ஒரு புதுமையாற் சிவபெருமான் ஒருமுறை விளக்கிக் காட்டினால், அவ்வாறே பலமுறையும் விளக்கல் வேண்டுமென்று அறிவுடையோர் கூறார். அகத்தேயுள்ள சிவநேயம் என்கின்ற சிவநெருப்பினால் சிவனடியாருடம்பு தூய்மையுடைய ஒளியுடம்பாகும் என்பதனையே, நந்தனார் புறத்தே நெருப்பிற் குளித்த அரிய நிகழ்ச்சி விளக்குவதாகும். சிவநேயம் உடையார்க்கு அகக்கருவி புறக்கருவிக ளெல்லாம் சிவவுருவாய் விளங்குமாகலின் அவரைப் பிறப்பு நோக்காது சிவமாகவே காண்டு வழிபடல் வேண்டு மென்னும் உண்மையை உணர்த்துதற் கன்றோ திருநாவுக்கரசு நாயனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/168&oldid=1591835" இலிருந்து மீள்விக்கப்பட்டது