பக்கம்:மறைமலையம் 29.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

புதிது

பு

மறைமலையம் - 29

எண்ணிறந்த சிற்றுயிர்கள் கத்தியால் வெட்டப்பட்டுத் துடிதுடிக்கும் பெருந்துன்பத்தினின்று தப்பிப்பிழைக்கும்; நாடெங்கும் அருளொழுக்கம் பரவும்; அது பரவவே, பொய்யும், புனைசுருட்டும், ஒருவர் மற்றொருவர்க்குத் தீங்கிழைக்கும் எண்ணிறந்த பொல்லாவழிகளுந் தொலையும். இங்ஙன மெல்லாங், கொலை புலை தவிர்ந்துவருவாரைச் சைவர்கள் தம்முடன் சேர்த்துக்கொள்வதாற் போதரும் நன்மைகளைச் சொல்லப்புகுந்தால், அவை அளவிலவாய் விரியும். அங்ஙனமே, சைவராவாரைச் சேர்த்துக் கொள்ளாமையாற் கிளைக்குந் தீங்குகளுஞ் சொல்லுக்கு அடங்கா. ஆகையால், “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" (திருமந்திரம், 95) என்று சைவசித்தாந்த முதலாசிரியரான திருமூலநாயனார் அருளிச்செய்திருக்கும் விழுமிய அறவுரையைக் கடைப்பிடித் தொழுகவேண்டிய வரான சைவர்கள், தாம் கைக்கொண்ட சீரிய சைவ வொழுக்கத்தைப் பிறருங் கடைப் பிடிக்குமாறு செய்து, அங்ஙனம் அதனைப் புதிது கடைப்பிடித்தாரைத் தம்மோடு உடன்வைத்து அளவளாவுதலே இன்றியமையாது செயற் பாலதாம்; அவ்வாறு செய்யாராயின் தம் ஆசிரியர் கற்பித்த சொல்வழி நடவாத பெருங் குற்றத்திற்கு ஆளாகிச், சைவ வொழுக்கத்திற்கு இன்றியமையாத அருளிரக்கம் இல்லாமையின் தங்குலமும் வரவர மாய்ந்து ஒழியப்பெறுவர்.

தமது சைவ ஒழுக்கத்தைப் பரப்புதலிற் கருத்தில்லா மலும், புதிது சைவவொழுக்கம் பூண்டாரையும் பிறரையுந் தம்மாட்டு அணுகவிடாமலுந் தமது ஊனுடம்பின் பிறப்பையே மேலதாகக் கருதி இறுமாந்தொழுகும் போலிச்சைவ வகுப்பினரின் குடும்பங்கள் கால்வழியின்றி நாளுக்குநாட் குன்றி மாய்ந்துபோதலைப் பல இடங்களில் எம் கண்ணெதிரே கண்டு வருகின்றேம், அவ்வகுப்பினரிற் பற்பலர் அதனைச் சொல்லக்கேட்டும் வருகின்றோம். இதற்கு ஏது என்னென்றால், தம்போன்ற ஏனை மக்களின் நன்மையைக் கருதாமையும், புது இரத்தக் கலப்பு இன்மையு மேயாம். ஒவ்வொரு போலிச் சைவவகுப்பினரும் "நாங்கள் முப்பது வீட்டுக்காரர்கள்; எங்களுக்குள்ளேதான் உண்ணல் கலத்தல்களைச் செய்கின்றோம்; இந்த முப்பது வீடுகளைத் தாண்டி வேறொரு வீட்டிற் கையைக்கூட நனைக்க மாட்டோம்” என்று மிகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/179&oldid=1591847" இலிருந்து மீள்விக்கப்பட்டது