பக்கம்:மறைமலையம் 29.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

209

கொள்ளத் தக்கதான ஒழுக்குஞ் செய்வர். தம்மினத்தவர் அல்லராயினுங், கொலை புலை தவிர்ந்த சைவவொழுக்கத் தினராயிருப்பவரைத் தம்மோடு உடன்வைத்துண்ணுதற்கும் வேளாளர் பின் பின் நிற்பவர் அல்லர். ஆனால், வேளாள வகுப்பினரிற் சிலர் இக்காலத்தில் ஆரியப் பார்ப்பனரைப் பார்த்துத் தாமும் அவர் போல் ஆகல்வேண்டி, விருந்தினராய் வந்த வேற்றினத்தாரைப் புறத்தே வைத்துத் தாம் உண்ணுதலும், உண்டு மிஞ்சிய மிச்சிற்சோற்றை அவர்க்கு இடுதலும், தாம் உண்டபின் எஞ்சிய உணவுகளைப் பறையர்க்கு இட்டால் தமக்குத் தீட்டாகும் என்று பிழைபடக் கருதி அவற்றை நிலத்தின்கண் வெட்டிப் புதைத்தலுஞ் செய்து நடத்தல் உண்மையே; என்றாலும், அன்பும் இரக்கமும் அருளும் பண்டுதொட்டு இயற்கையாகவுடைய வேளாள நன்மக்கட்கு இத்தகைய இரக்கமற்ற கொடுஞ் செயல் சிறிதுந் தகாதென்பதை யுணர்ந்து தம்மைத் திருத்திக் கொண்டு, சைவ வொழுக்க முடைய வேற்றினத்தாருஞ் சைவ வொழுக்கமில்லா வேற்றினத் தாருமாகிய எல்லாக் குடிமக்களையும் அவரவர்க்கேற்ற தகுதியாக எவர் மனமும் வருந்தாமற் சிறப்பாக நடப்பித்தலி லேயே கண்ணுங் கருத்தும் வைத்தல் வேண்டும். சைவ வொழுக்கத்தினராய் உயர்ந்துவரும் வேற்றினத்தாரைக் கீழே தூக்கி அழுத்தாமல், அருட்கை கொடுத்து மேற்றூக்கி அவரைத் தம்மினத்தராக்கிக் கொள்ளல் வேண்டும். அப்போது தான்கொலையும் புலையுங் கட்குடியும் இவை வாயிலாகவரும் ஏனைத் தீவினைகளும் உலகில் வரவரக் குறையும். 'யாம் உயர்ந்தாற்போதும், பிறர் எங்ஙனமாயின் எமக்கு என்!' என்று தமது நலமே கருதிப் பிறர் நலங் கருதாதார்க்கு அன்பும் அருளும் இரக்கமும் இன்மையால் அவர்அவையெல்லாம் ஒருங்கே உடைய கடவுளின் திருவருளைப் பெறமாட்டார்; அவர் இம்மை மறுமை யிரண்டிலும் உயர்ந்த நலங்களைப் பெறார்; அவர் உண்மை வேளாளரும் ஆகார்; அவரை உயர்ந்தோரென அறிவுடையோருங் கொள்ளார்.

ஆகையால்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டொழுக லான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/234&oldid=1591903" இலிருந்து மீள்விக்கப்பட்டது